

வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் ஆர்டர்களை வேகமாக டெலிவரி செய்வதற்காக பொருட்களை பேக் செய்யும் ஊழியத்தில் ஆயிரக்கணக்கானோர் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர், இந்நிலையில் பேக்கேஜிற்கு எந்திரங்களை இறக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.
இதனால் அமெரிக்காவில் சுமார் 1,300 ஊழியர்களுக்கும் மேல் வேலையை இழந்து விடுவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது. எந்திரங்களுக்காக ஒரு எந்திரத்திற்கு சுமார் 10 லட்சம் டாலர்கள் வரை செலவு செய்ய அமேசான் தயாராகி விட்டது, இதுதவிர நடைமுறைச் செலவுகள் உள்ளன, ஆனால் இந்தச் செலவை 2 ஆண்டுகளில் மீட்டு விடுவோம் என்கிறது அமேசான்.
இத்தாலி நிறுவனமான சிஎம்சி எஸ்.ஆர்.எல். என்ற நிறுவனம் ‘கார்ட்டன் ராப்’ (CartonWrap) என்ற இந்த இயந்திரத்தை தயாரித்துக் கொடுக்கிறது, இந்த இயந்திரங்கள் மனிதர்களை விட அதிவேகமாக பேக் செய்கிறதாம். அதாவது மணிக்கு 600-700 பெட்டிகளை இந்த இயந்திரங்கள் பேக் செய்து விடுகின்றன. மனித பேக்கரை விட 4-5 மடங்கு வேகமாகச் செயல்படுகின்றனவாம். வாடிக்கையாளர்கள் ஆர்டரை லோட் செய்ய இந்த இயந்திரத்திற்கு ஒரேயொரு நபர் இருந்தால் போதுமானது.
இந்நிலையில் அமேசான் தங்கள் ஊழியர்களிடம் ‘வேலையை விடுங்கள், அமேசான் பொருட்களை வேகமாக டெலிவரி செய்யும் சுயதொழிலுக்கு நாங்கள் உதவுகிறோம்’ என்ற முன்மொழிவை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஷாப்பர்களுக்கு வேகமாக டெலிவரி செய்யும் திட்டம் சிறப்புற செயலாற்றும் என்கிறது அமேசான். இந்த திட்டத்துக்கு ஒப்புக் கொள்பவர்களுக்கு ஸ்டார்ட்-அப் செலவாக 10,000 டாலர்கள் வரை செலவுகளை ஏற்பதாக அமேசான் தெரிவிக்கிறது. மேலும் வேலையை விட்டு இதற்கு ஒப்புக் கொண்டால் 3 மாத சம்பளமும் தருவதாக வலியுறுத்தியுள்ளது.