Last Updated : 04 Sep, 2014 12:00 AM

 

Published : 04 Sep 2014 12:00 AM
Last Updated : 04 Sep 2014 12:00 AM

பிக் டேட்டா: அந்தரங்கமும் அம்பலமாகும்!

சென்ற வாரம் தி இந்து தமிழ் வாசகர் ஒருவர், ``என் மனைவிக்குத் தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’’ என்று கமெண்ட் போட மற்றொருவரோ `எனக்கே தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’ என்று ஒரு காமெடி கமெண்ட்டை போஸ்ட் செய்திருந்தார். அது காமெடியல்ல. அப்பட்டமான உண்மை என்பதை நாம் உணராமலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம். அது என்ன அலைந்து கொண்டிருக்கின்றோம் என்று கிண்டல்? நாம நம்மளுடைய பிழைப்பையல்லவா பார்க்கின்றோம் என்று நீங்கள் சொல்லலாம். பிழைப்புக்காக நாம் சுற்றித்திரியும் போது நாம் விட்டுச்செல்லும் தடயங்களை வைத்து தொழிலுக்கும், தனி மனிதனுக்கும் உபயோகப்படுமளவிற்கு மாற்ற உதவுவதுதான் அனலிடிக்ஸ்.

கடந்த சில வருடங்களில் எற்பட்டுள்ள தொலைத்தொடர்பு சார்ந்த அறிவியல், தொழில்நுட்பம், இன்டெர்நெட் முன்னேற்றங்களினால், நாம் செய்யும் பெரும்பாலான காரியங்களினால் நமக்கே தெரியாமல் உருவாகும் பல டிஜிட்டல் தடயங்கள் (digital traces) ஆங்காங்கே ஆவிகள் போல உலாவிக்கொண்டிருக்கின்றன.

நீங்கள் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குச் சென்று பொருட்கள் வாங்கும் போது, மாணவர்கள் கல்லூரி வகுப்புகளை கட் அடித்து விட்டு ஏதாவது ஒரு மாலில் (Mall) உள்ள சினிமா தியேட்டருக்குச் செல்லும்போது, நவீன ஒப்பனை நிலையத்தில் ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளும்போது, மொபைல் போனில் பேசும் போது, பிரவுசிங் செய்யும் போது, நண்பர்களுடன் ஜாலியாய் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் போது - இப்படி எங்கு போனாலும், என்ன செய்தாலும் அந்தந்த இடங்களில் உருவாகும் டிஜிட்டல் தடயங்களை எல்லாம் கூட்டி ஒன்று சேர்த்தால் அவைகள் உங்களைப் பற்றியும், உங்கள் எண்ணங்களைப் பற்றியும், உங்கள் விருப்பங்கள், வெறுப்புகள், நிறைவேறாத, மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆசைகள்(!) என்று உங்களைப் பற்றிய ஒரு அழகான உண்மைக் கதையையே சொல்லக்கூடும்.

பேஸ் புக்கிலோ, ட்விட்டரிலோ அல்லது வாட்ஸ் அப்பிலோ உங்கள் நண்பர்களுக்காக, இந்த உலகத்திற்காக நீங்கள் தெரியப்படுத்தும் விசயங்கள் அனைத்தும் சென்சார் செய்யப்பட்டவைதான். ஆனால், உங்கள் டிஜிட்டல் தடயங்களும், குப்பைகளும் மிக அப்பட்டமான உண்மையானவை.

எப்படி அனலெடிக்ஸ் ஒருவருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்கு சனிக்கிழமை தி இந்து தமிழில் >“நீங்கள் அதிகம் பதற்றமடைகிறீர்களா?- உங்கள் பேஸ்புக் போட்டோ பகிர்வுகளை சற்று கண்காணியுங்கள்” என்ற தலைப்பில் வந்த, லண்டனில் வெளியான ஒரு ஆய்வறிக்கை ஒரு நல்ல உதாரணம்.

அந்த ஆய்வறிக்கையில்: "ஒருவர் அதிகமான பதற்றத்துடன் காணப்படுவதற்கும், பேஸ்புக்கில் புகைப்படங்களை மிக அதிக அளவில் அப்லோட் செய்வதற்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது. பிறரால் கண்டுகொள்ளப்பட வேண்டும், அதிகமான “லைக்ஸ்” வேண்டும் என்று எண்ணுபவர்களே இப்படி அதிக அளவில் போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றுகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், அவர்கள் பிறரிடம் சகஜமாகப் பழகுபவராக இருப்பதில்லை என்றும் சமூக வலைதளங்களில் தங்கள் எண்ணங்களை எடுத்துரைப்பதில் தேர்ந்தவராகவும் இருப்பதில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒவ்வொருத்தரைப் பற்றியும் சேர்க்கப்படும் விஷயங்கள் கற்பனைக்கெட்டாத, எண்ணில் அடங்காத அளவு பூதாகரமானவை. இதில் பயம் கலத்த உண்மை, அதே சமயம் புல்லரிக்கும் விஷயம் என்னவென்று தெரியுமா? இது மனித இயல்பை, மனித உணர்வுகளை, மிக ஆழமாகவும், முழுமையாகவும் அப்பட்டமாகவும் HD தரத்தில் படம் பிடித்து காட்டும் சகலகலா வல்லமை படைத்தது அனலிடிக்ஸ். நம்மை பற்றிய, நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத பல உண்மைகளும் அடங்கியது என்பதுதான் அது. இந்தத் தடயங்களை எந்த ரப்பரையும் வைத்து அழிக்க முடியாது. நாம் கவனமாக இல்லா விட்டால் இனி வரும் காலங்களில் அந்தரங்கம் (பிரைவசி) என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கப்போகின்றது எனலாம்.

அந்தரங்கத்தன்மை போகின்றது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் இந்த டிஜிட்டல் தடயங்கள் நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்யமுடியும் என்பதுதான் ஆச்சரியம்தரும் ஒரு விஷயம்.

கோடம்பாக்கத்திலிருந்து தினமும் இந்து அலுவலகத்திற்கு ஒருவர் செல்ல வேண்டும் என்றால் கோடம்பாக்கம் சாலையில் நீண்ட தூரம் பயணித்தாக வேண்டும். காலையில் வேலைக்கு கிளம்பும் போது மட்டும் நாம் அனைவரும் எப்படி தினமும் லேட்டாக கிளம்ப முடிகிறது என்பது புரியாத விஷயம். அப்படி ஏற்கனவே லேட்டாக வீட்டிலிருந்து கிளம்பும் போதே கோடம்பாக்கம் சாலையில் ஒரு பிரச்சினையினால் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு டிராபிக் ஜாம் ஆகி எல்லோரும் மாட்டிக்கொண்டு, பொறுமை இல்லாமல் ஹார்ன் அடித்து நின்று கொண்டு இருந்தால் அது நமக்கு தெரிய வாய்ப்பே இல்லை. தெரியாமல் நாமும் போய் மாட்டிக்கொண்டு முழிக்காமல், வீட்டில் கிளம்பும் போதே ‘பிரதர், அந்த ரோடில் போக வேண்டாம், ட்ராபிக் ஜாம் பயங்கரமாக இருக்கிறது. ஓரு மணி நேரத்திற்கு மேல் லேட்டாகி விடும். வேற வழியில் ஓடிப்போயிடு’ என்று எச்சரிக்கக்கூடியது அனலிடிக்ஸ். கூடவே போவதற்கு எது சரியான வழி என்றும் காட்டக் கூடியது.

அதே போல், நீங்கள் வழக்கமாக அலுவலகம் செல்லும் டவுன் பஸ், எங்கோ ஒரு இடத்தில் ரிப்பேராகி நின்று கொண்டிருப்பது தெரியாமல் நீங்கள் பஸ் ஸ்டாப்பில் கடிகாரத்தையும் ரோட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்கும் போது, ‘உன் பஸ் வரும்! ஆனா, இப்போதைக்கு வராது! ஆட்டோவோ அல்லது கால் டேக்ஸியோ பிடித்து ஆபீஸ் போறதுதான் நல்லது’ என்று சொல்லக்கூடியது. எந்தெந்த சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும், எந்தெந்த இடங்களில் கழுத்தில் இருக்கும் செயின் அறுக்கப்படும் வாய்ப்புள்ளது என்று அறிவுறுத்தும்.

மற்றுமொறு மிக அற்புதமான ஒரு விஷயம், நமக்குத் தெரியாமல் நம்மில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து தகுந்த சமயத்தில் உஷார் படுத்தவும் கூடும். திடீரென்று அடிக்கடி வெளியில் வழக்கமாக செல்வதைத் தவிர்த்து, அலுவலக விஷயங்களைத் தவிர்த்து முக்கிய நண்பர்களுக்கு அடிக்கடி போன் செய்தால், உங்களுக்கு ஏதோ பிரச்சனை உள்ளது என்றறிந்து உடனே டாக்டரை சென்று பாருங்கள் என்று கூடச் சொல்லும் வாய்ப்புள்ளது. இரும்பிலே ஒரு இருதயத்தை டைரக்டர் ஷங்கர் முளைக்க வைத்ததைப் போல, செல்போனில் ஒரு சினேகிதனை அனலெடிக்ஸ் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.

பிசினஸிற்கு இது எப்படி உதவும் என்கின்றது என்பதைக் கேட்டால் உங்களின் ஆச்சரியம் உச்சத்துக்கு செல்லும். தீபாவளி ரிலிஸ் படத்துக்கு தியேட்டருக்கு ஒருவாரம் கழித்துப்போனாலுமே துணிக்கடை விளம்பரம் திரையில் வருவதை இப்போது நாம் பார்க்கின்றோம். வரும் காலத்தில் பகல் காட்சிக்கு கல்லூரி மாணவர்கள் கூட்டமாக வந்தால் அவர்களுடைய செல்போன் பதிவுகளை அலசி பேஸ்புக்கில் அவர்களில் பெரும்பாலானோர் லைக் செய்திருக்கும் அயிட்டங்களின் விளம்பரம் மட்டுமே திரையிடப்பட்டு அந்த நிறுவனங்களிடம் மட்டுமே பணம் வசூலிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. திரையரங்கின் உள்ளே இருக்கும் கூட்டத்தின் பல்ஸைப் பார்த்து விளம்பரம் போடும் உத்தி வெற்றியளிக்கவே செய்யும் இல்லையா? வெட்டியாய் பல்லே இல்லாதவர்கள் கூட்டத்துக்கு பக்கோடா விளம்பரத்தை காண்பிப்பதில் பிரயோஜனம் எதுவுமில்லையே!

தொடர்புக்கு: cravi@seyyone.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x