Published : 20 Apr 2019 01:59 PM
Last Updated : 20 Apr 2019 01:59 PM

‘‘சீனா வேண்டாம் இனி இந்தியா தான்’’ - முழுவீச்சில் களமிறங்குகிறது அமேசான்

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்த படியாக அமேசான் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

அமேசான் நிறுவனம் கடந்த 2004ல் சீனாவில் நுழைந்தது. அங்கு உள்ளுர் ஆன்லைன் புத்தக விற்பனை தளத்தை 75 மில்லியன் டாலருக்கு வாங்கியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது வணிகத்தை நிலைநாட்டி வந்தது.

உயர்தரமான மேற்கத்திய பொருட்கள் மற்றும் இலவச சர்வதேச விநியோகங்கள் போன்ற சலுகைகள் வழங்கியதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் செயலில் ஈடுபட்டது.

ஆனால் சீனாவைச் சேர்ந்த அலிபாபா, அமேசானுக்கு போட்டியாக கடும் முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக உள்ளூர் பொருட்களை விலைக்கு வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்வதில் குறைந்த செலவில் அலிபாபா சாதித்த காட்டியது. ஆனால் அந்த அளவிற்கு  இறங்கி வர்த்தகம் செய்யும் நிலையில் அமேசான் இல்லை. ஊழியர்களின் சம்பளம் முதல் குடோன் பராமரிப்பு வரை அனைத்தும் அமேசானை அச்சுறுத்தியது.

இத்துடன். சீனாவில் ஜேடி.காம் ஆகிய நிறுவனங்கள் அமேசானுக்கு கடுமையான சவாலாகத் திகழ்கின்றன. இந்தப் போட்டிகளை சமாளித்து தங்களது வியாபாரத்தை நிலை நிறுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அமேசான் தரப்பு உணர்ந்துள்ளது.

இதனால், சீனாவிலிருந்து தனது செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டு வெளியேற  அமேசான் முடிவு செய்துள்ளது. அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாகவும் சீனாவிலிருந்து வெளியேறும் முடிவை அமேசான் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம் சீனாவில் அமேசான் வெப் சர்வீஸ் (ஏடபிள்யூஎஸ்), கின்டில் இ-புக் உள்ளிட்ட சேவைகளைத் தொடரலாம் என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சீனாவில் உள்ளவர்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்த தயாரிப்புகள் தேவைப்படுகின்றன. அவற்றை மட்டும் வாங்கி அளிக்க முடிவு செய்துள்ளது.

உலகின் 2வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் ஏற்கெனவே அமேசான் பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருகிறது. சீன சந்தை கைகொடுக்காத சூழலில் இனிமேல் தனது கவனத்தை முழு வீச்சில் இந்தியா மீது செலுத்தப் போவதாக அமேசான் கூறியுள்ளது.

இந்தியாவில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதார சூழல் கைகொடுக்கும் வகையில் இருப்பதாலும், வர்த்தகத்தை அதிகஅளவில் விரிவுபடுத்த வாய்ப்புகள் இருப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x