

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை மாற்றுவதற்கு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனியாக மாற்றுவது என்ற பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளின் சென்னை அங்கமாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. இந்த அணியின் பிரபலத்தை (பிராண்ட்) முழு வீச்சில் பயன்படுத்திக் கொள்வதற்காக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
துணை நிறுவனமாக மாறும் நடவடிக்கைகள் ஜனவரி 1, 2015 முதல் அமலுக்கு வரும். இந்த நடவடிக்கைகள் உரிய அனுமதி பெற்ற பிறகு மேற்கொள்ளப்படும் என இந்தியா சிமென்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.