

வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் வீடு மற்றும் வாகனக் கடன் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ 6.25 சதவீதமாக குறைந்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. குழுவில் உள்ள 4 உறுப்பினர்கள், வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. 6.25 சதவீதத்தில் இருந்து 6.00 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டத்தின் போதும் வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பதுதான் கேள்வியாக இருக்கும். தொழில்துறை சற்று சுணக்கமாக இருக்கும் சூழலில் அதிக அளவிலான முதலீடுகளை சந்தையில் வரச்செய்து அதன் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
முதலீடுகள் அதிகரிக்க வேண்டுமெனில் மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் நுகர்வை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால் வர்த்தக வங்கிகளும் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.