Published : 07 Mar 2019 04:27 PM
Last Updated : 07 Mar 2019 04:27 PM

புகை மாசை மறைக்க ‘மோசடி கருவி’ - ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய் அபராதம்

புகை மாசை மறைக்க ‘மோசடி கருவி’ பொருத்திய புகாரில்  ஃபோக்ஸ்வேகன் கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரித்த டீசல் கார்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, 40 மடங்கு அதிகளவு கார்பன் டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. அமெரிக்காவில் நடந்த புகை மாசு பரிசோதனையில், அந்நிறுவனம் முறைகேடு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள 1 கோடிக்கும் அதிகமான கார்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டது.

இந்நிலையாவிலும், புகை மாசு முறைகேட்டில்  ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஈடுபட்டதா என ஆய்வுகள் நடத்தப்பட்டன. டீசல் கார்களில் மாசுக்கட்டுப்பாடு ஆய்வுகள் நடத்தப்பட்டன. டீசல் கார்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை கொண்ட மோசடியான கருவி ஒன்றை அந்த நிறுவனம் பொருத்தியது தெரிய வந்தது.

காற்று மாசு விதிகளை மீறிய விவகாரத்தில்  ஃபோக்ஸ்வேகன் நிறுவன வாகனங்களின் இந்திய விற்பனைக்கு தடை கோரி பசுமை தீர்ப்பாயத்தில் பலர் மனு அளித்திருந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், ஆட்டோமோடிவ் ஆய்வுக்கான இந்திய கூட்டமைப்பு மற்றும் தேசிய பசுமை பொறியியல் ஆய்வு அமைப்பு உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு, டெல்லியில் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்சைடை காற்றில் கலக்க விட்டதாக போக்ஸ்வேகன் நிறுவனம் 171 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த பரிந்துரைத்தது.

இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்,  ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைக்கால உத்தர பிறப்பி்தது  இருந்தது.

வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி  ஆதர்ஷ் குமார் கோயல்,  ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் டீசல் கார்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை கொண்ட மோசடியான உபகரணத்தை பொருத்தியதால் 500 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அபராத தொகையை இரண்டு மாதங்களுக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வசம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x