

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) மற்றும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் உரிமை கோராத தொகையை பயன்படுத்துவது குறித்து ஆராய ஒரு குழுவை மத்திய நிதி அமைச்சகம் அமைத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஹெச்.ஆர். கான் தலைமையிலான இக்குழுவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அமைத்துள்ளார். பிபிஎஃப் மற்றும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் உரிமை கோராத தொகை குறித்து ஆய்வு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தொகையை மூத்த குடிமக்கள் நலனுக்கு எந்த வகையில் பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆராயுமாறும் அவர் பணித்துள்ளார்.
உரிமை கோராத பணத்தை அரசு நிதியில் சேர்ப்பதா அல்லது இதற்கு தனி கணக்கு தொடங்கி அதை வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவதா என்பது குறித்து இந்தக் குழு ஆராயும்.
இந்த குழுவில் தபால்துறையின் செயலர், மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் பிரிவு இணைச் செயலர்கள், பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு டிசம்பர் 31, 2014-ல் தனது அறிக்கையை தாக்கல் செய்யும்.