27000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

27000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்
Updated on
1 min read

திங்கட்கிழமை வர்த்தகத்தில் நிப்டி முதல் முறையாக 8000 புள்ளிகளை கடந்தது. அதை போலவே செவ்வாய் கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் முதல்முறையாக 27000 புள்ளிகளைக் கடந்தது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்தது, அந்நிய முதலீடு தொடர்ந்து அதிகரிப்பது, பிரதமர் மோடி ஜப்பானில் பேசியது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் உயர்ந்தன.

சென்செக்ஸ் 152 புள்ளிகள் உயர்ந்து 27019 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 27082 புள்ளியைத் தொட்டது. அதேபோல நிப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 8083 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 8101 புள்ளியை தொட்டது.

தொடர்ந்து எட்டாவது நாளாக சென்செக்ஸ் உயர்ந்து முடிவடைந்தது. 26000 புள்ளியை கடந்த ஜூலை 7-ம் தேதி சென்செக்ஸ் தொட்டது. அதற்கடுத்து 40 வர்த்தக தினங்களில் 1000 புள்ளிகள் உயர்ந்து 27000 புள்ளியை சென்செக்ஸ் தொட்டது.

உலோகம், மின்சாரம் மற்றும் கேபிடல் குட்ஸ் துறை குறியீட்டை தவிர அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. நுகர்வோர் பயன்படுத்தும் பொருள்களின் குறியீடு 2.76 சதவீதமும், மருத்துவம் 1.84 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் 1.04 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன.

மிட்கேப் குறியீடு 0.55 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.91 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன. திங்கட்கிழமை வர்த்தகத்தில் 554.14 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது.

சென்செக்ஸ் பங்குகளில் சிப்லா, பார்தி ஏர்டெல், சன் பார்மா, ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய பங்குகள் அதிகம் உயர்ந்து முடிந்தன. மாறாக எஸ்.எஸ்.டி.எல், டாடா பவர், ஹிண்டால்கோ, விப்ரோ மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

ரூபாய் மதிப்பு சரிவு

அந்நிய முதலீடு அதிகரித்து வரும் அதே நேரத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வருகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. ஆசிய கரன்ஸிகளின் பலவீனமான நிலை, ஐரோப்பிய மத்திய வங்கியின் ஊக்க நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு, அமெரிக்காவின் வேலை இல்லாதவர்கள் குறித்த தகவல்கள் போன்றவை வர இருப்பதால் ரூபாயின் மதிப்பு ஸ்திரமில்லாமல் இருக்கிறது. 15 காசுகள் சரிந்து ஒரு டாலர் 60.68 ரூபாயாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in