

கடந்த வார இறுதியில் இரு தினங்களாக சரிந்த இந்திய பங்குச்சந்தைகள் திங்கள் கிழமை உயர்ந்து புதிய உச்சத்தில் முடிந்தன. சென்செக்ஸ் இதற்கு முந்தைய உச்சமான 27225 (செப்-3) புள்ளியை கடந்து வர்த்தகத்தின் இடையே 27354 புள்ளியைத் தொட்டது.
வர்த்தகத்தின் முடிவில் 293 புள்ளிகள் உயர்ந்து 27319 புள்ளியில் முடிவடைந்தது. இதேபோல சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயர்ந்து 8173 புள்ளியில் முடிவடைந்தது. அன்னிய செலாவணி தகவல்கள், ஐஐபி குறியீடு மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட தகவல்கள் சாதகமாக வரும் என்ற நம்பிக்கையால் பங்குச்சந்தைகள் உயர்ந்தன.
கன்ஸ்யூமர் டியூரபிள் குறியீட்டை தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. ஆயில் அண்ட் கேஸ் குறியீடு 1.79 %, எப்.எம்.சி.ஜி 1.4%, கேபிடல் குட்ஸ் 1.29% மெட்டல் குறியீடு 1.25 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தது. கன்ஸ்யூமர் டியூரபிள் 0.22 சதவீதம் சரிந்து முடிவடைந்தது. ஸ்மால்கேப் குறியீடு 2.1 சதவீதம் உயர்ந்தும், மிட்கேப் குறியீடு 1.3 சதவீதம் உயர்ந்தும் முடிவடைந்தது.
சென்செக்ஸ் பங்குகளில் ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ, விப்ரோ மற்றும் ஹெச்.யூ.எல் ஆகிய பங்குகள் உயர்ந்தும் என்.டி.பி.சி, எம் அண்ட் எம், டாடா பவர் மற்றும் பி.ஹெச்.இ.எல். ஆகிய பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.
இதற்கிடையே கோல்மேன் சாக்ஸ் நிறுவனம் நிப்டியின் இலக்கை உயர்த்தியிருக்கிறது. 2015 ஜூலையில் 8600 புள்ளிகளுக்கு நிப்டி செல்லும் என்று முன்பு கூறியிருந்த கோல்ட்மென் சாக்ஸ் இப்போது 2015 செப்டம்பரில் 9000 புள்ளிகளுக்கு நிப்டி செல்லும் என்று கணித்திருக்கிறது.