

விமான சேவை நிறுவனத்தை திவாலாகும் நிலையிலிருந்து மீட்டு தொடர்ந்து விமான சேவையைத் தொடர்வதற்கு அதன் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட கடன்தாரர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
நாட்டின் இரண்டாது பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தற்போது மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளது. இந்நிறுவனத்துக்கு ரூ.8,200 கோடி கடன் உள்ளது. மேலும், கடன் பத்திரங்கள் வைத்திருப்போருக்கு வட்டி தர பணம் இல்லை.
விமான ஓட்டுநர்களுக்கு சம்பள பாக்கி எனப் பல பிரச்சினைகள் ஜெட் ஏர்வேஸை பறக்க விடாமல் தடுக்கின்றன. இதற்கிடையில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்குத் தடை விதித்தது இந்நிறுவனத்தின் சேவையைப் பாதித்துள்ளது.
மேலும், ஜெட் ஏர்வேஸ் விமான ஓட்டுநர்கள் மார்ச் 31-க்குள் சம்பள பாக்கியைத் தராவிட்டால், ஏப்ரல் 1-ல் வேலை நிறுத்தத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.
இப்படி எல்லா பக்கமும் பிரச்சினைகளும் சிக்கல்களும் சூழ்ந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டு, விமான சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு உதவத் தயாராக இருக்கிறோம் என பாரத ஸ்டேட் வங்கி தலமையிலான கடன்தாரர்கள் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை நேற்று பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார், விமானப் போக்குவரத்துத் துறை செயலர் பிரதீப் சிங் கரோலா, பிரதமர் அலுவலக செயலர் நிருபேந்திரா மிஸ்ரா ஆகியோர் சந்தித்து ஆலோசித்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில், ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் அரசு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், இதில் நாட்டின் நலனும், மக்களின் நலனும் உள்ளன. எனவே அரசிடம் இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளோம்’’ என்றார்.
அப்போது, நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்துவது சரியான முடிவு அல்ல. திவால் நடவடிக்கை என்பது நிறுவனத்தை முழுவதுமாக நிறுத்துவதற்கு சமம். ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் திவால் நடவடிக்கையைக் கடைசி தேர்வாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க கடன்தாரர்கள் ஒத்துழைப்புத் தருவதாகவும் உறுதியளித்தனர்.
மேலும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகம் சரியில்லை என்றும், ஜெட் ஏர்வேஸை மீட்டு தொடர்ந்து விமான சேவையை வழங்க வேண்டுமெனில் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் அதன் தலைவர் நரேஷ் கோயல் 51 சதவீதப் பங்குகளை வைத்துள்ளார். அபுதாபியைச் சேர்ந்த எதியாட் விமான சேவை நிறுவனம் 24 சதவீத பங்குகளைத் தன் வசம் வைத்துள்ளது.