Published : 13 Mar 2019 11:14 AM
Last Updated : 13 Mar 2019 11:14 AM

பட்டாசு தொழிற்சாலையை மூட உத்தரவிட்டு ஏழைகளின் வேலைவாய்ப்பை பறிக்க மாட்டோம்: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

பட்டாசு தொழிற்சாலைகளை மூடு வதற்கு உத்தரவிட்டு ஏழைகளை வேலையிழக்கும் நிலைக்கு தள்ள மாட்டோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு, ஒலி மாசு ஏற்படுவதாக உறுதியான புள்ளிவிவரங்கள் இல்லாத நிலை யில் அவற்றை மூட உத்தரவிட முடியாது என்று நீதிபதி எஸ்.ஏ. போப்டே தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி அதிக ஒலி எழுப்பும், ரசாயனம் மிகுந்த பட்டாசுகளுக்கு தடை விதிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதேசமயம் மாசு குறைந்த, குறைந்த ஒலி எழுப்பும் பட்டாசுகளை அனுமதிக்கலாம் என்றும் கூறியிருந்தது. இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் நீதிபதி கூறியதாவது:

பட்டாசு ஆலையில் பணி புரியும் ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப் பிக்காது. அவ்விதம் பிறப்பித்தால் அவர்கள் வறுமையில் தள்ளப் படுவர். நீதிமன்றத்தால் வேலை வாய்ப்பை உருவாக்க முடியாத நிலையில், நீதிமன்ற உத்தரவு மூலம் ஏழை மக்களின் வாழ்வா தாரத்தை சிதைக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று கருதுவதாக நீதிபதி போப்டே தெரிவித்தார்.

மேலும் சட்ட ரீதியாக லைசென்ஸ் வழங்கப்பட்ட ஒரு தொழிலை மூடும் உத்தரவை பிறப் பிப்பதற்கான அதிகாரம் நீதி மன்றத்துக்கு இருப்பதாக எப்படி கருத முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

நீதிபதியின் இந்த உத்தரவானது கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி பிறப்பித்த, அதாவது ஒலி மாசு கொண்ட, ரசாயனக் கலப்பு நிறைந்த பட்டாசுகளுக்கு தடை விதிப்பதாக பிறப்பித்த உத் தரவுக்கு நேர்மாறானதாகும்.

அக்டோபர் மாதம் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு எவைதான் பசுமை சூழ் வெடிகள் என்ப தற்கு ஒருமித்த கருத்து இதுவரை உருவாகவில்லை. ஆனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள் ளன. குறிப்பாக தமிழகத்தில் பட்டாசு அதிகம் தயாரிக்கும் சிவகாசி பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

பட்டாசு வெடிப்பதால் நிகழும் ஒலி மற்றும் காற்று மாசை விட வாகனங்களால் ஏற்படும் மாசுதான் அதிகம் என்று நீதிபதி சுட்டிக் காட்டினார்.

இந்த வழக்கு இப்போதுதான் நீதிபதி போப்டே அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. முன்னர் இந்த வழக்கை நீதிபதி ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு விசாரித்தது. அவர் சமீபத்தில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்த வழக்கு இப்போது நீதிபதி போப்டே வசம் வந்துள்ளது. உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறும் வாய்ப் புள்ளோர் பட்டியலில் நீதிபதி போப்டே பெயரும் இடம் பெற்றுள்ளது.

பிற நாடுகளில் பட்டாசு வெடிப் பதற்கு மிகுந்த கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளதாக தடை கோரிய தரப்பு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார் அதற்கு பதிலளித்த நீதிபதி, இந்தியாவில் பட்டாசுகளை நேசிக்கும் அளவுக்கு மேலை நாடுகளில் பட்டாசு மீதான மோகம் கிடையாது என்றார்.

வழக்கு விசாரணை முழுவதும், வேலை இல்லா திண்டாட்டத்தை உருவாக்கும் தீர்ப்பை நீதிமன்றம் ஒரு போதும் பிறப்பிக்காது என்று குறிப்பிட்டார். தமிழக பட்டாசு உற்பத்தி யாளர்களுக்கு பக்கபலமாக தமிழக அரசு தரப்பும் தனது கருத்துகளை பதிவு செய்திருந்தது. அதற்கேற்ப வழக்கறிஞர் வாதிட்டார்.

தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் மட்டுமே காற்று மாசு ஏற்படுவதாகக் கூறுவதற்கு போதுமான ஆய்வு, புள்ளிவிவர தகவல்கள் கிடையாது என்றும், ஒரு தொழில் துறையின் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் போதுமான ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்றும் வாதிட்டனர். இதுகுறித்து உரிய ஆதாரங்கள், ஆய்வு முடிவுகள் கிடைக்கும் வரை நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

பட்டாசு தொழிற்சாலை மூலம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி வருமானம் கிடைப்பதாகவும், இந்தத் தொழிலை நம்பி 5 லட்சம் குடும்பங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஒரு மாநிலத்துக்கு மிகக் கணிச மான வருவாயை அளிக்கும் ஒரு தொழில், அதை நம்பி 5 லட்சம் குடும்பங்கள் உள்ள நிலையில் தடை விதித்து அதை கேள்விக்குறி யாக்கிவிடக் கூடாது என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கைப் பொறுத்த மட்டில் மக்கள் நலன் மற்றும் ஒரு தொழிலுக்குள்ள உரிமை ஆகியவற்றை சீர்தூக்கி பார்க்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத் துக்கு உள்ளதாக ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணையின் போதும் தெரிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x