

தகவல் தொழில்நுட்ப சேவை நிறு வனமான மைண்ட்ட்ரீ நிறுவனத்தை வலுக்கட்டாயமாக அபகரிக்க நினைக்கவில்லை என எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ் என் சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
10 பேர் சேர்ந்து தொடங்கிய மைண்ட் ட்ரீ நிறுவனம் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில் கணிசமான சந்தை பங்களிப்பைக் கொண்டுள்ளது. நிறுவனம் தொடங் கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது நிறுவனத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
நிறுவனத்தில் அதிக அளவு பங்குகளை வைத்துள்ள காபிடே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா தனது பங்குகளை எல் அண்ட் டி நிறுவனத்துக்கு விற்றதை அடுத்து, மைண்ட்ட்ரீ நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளில் எல் அண்ட் டி தீவிரம் காட்டி வருகிறது. பங்குச் சந்தையிலிருந்து 15 சதவீத பங்குகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் கூடுதலாக 31 சதவீத பங்குகளை நிறுவன புரொமோட்டர்களிடமிருந்து பெற விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு மைண்ட்ட்ரீ நிறுவன பங்குதாரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொழில் துறையில் சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில் எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ் என் சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஆறு வருடங்களுக்கு முன்பே மைண்ட் ட்ரீ நிறுவனத்தை விற்க எங்களிடம் அணுகினார்கள். அப்போது எங்களுக்கு அதற்கான யோசனை எதுவும் இல்லை. மேலும், அப்போது சித்தார்த்தா அவரது பங்குகளை விற்கும் முடிவிலும் இல்லை. தற்போது, அவர்தான் எங்களிடம் அவரது பங்குகளை விற்றுள்ளார். மைண்ட்ட்ரீ நிறுவனமும் விற்பனை செய்யும் முடிவில் உள்ளது. எனவே அதற்கான முயற்சிகளை எல் அண்ட் டி எடுத்து வருகிறது. இதில் எந்தவித விதிமீறல்களும் இல்லை. நாங்கள் கட்டாயப்படுத்தி மைண்ட்ட்ரீ நிறுவனத்தை பிடுங்க நினைக்கவில்லை. மைண்ட் ட்ரீ நிறுவன நிர்வாகத்தில் எந்த மாற்றங்களையும் கொண்டுவரும் எண்ணமும் இல்லை” என்றார்.
மைண்ட்ட்ரீ நிறுவனத்தைக் கையகப்படுத்தும் எல் அண்ட் டி நிறுவனத்தின் முயற்சிகள் வெற்றிபெற்றால், தற்போது ஐடி துறை தொழில்களில் விற்பனை அளவில் 8-ம் இடத்தில் உள்ள எல் அண்ட் டி, 6-ம் இடத்துக்கு முன்னேறும். இந்த இணைப்பின் மொத்த மதிப்பு ரூ. 11 ஆயிரம் கோடி ஆகும்.