

வெள்ளிக்கிழமை வெளியான முதல் காலாண்டின் ஜிடிபி புள்ளி விவரங்கள் சாதகமாக வந்ததால், திங்கள் கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி முதல் முறையாக 8000 புள்ளிகளைக் கடந்து முடிவடைந்தது. முதல் காலாண்டு இந்திய ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவீதமாகும். நிப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 8027 புள்ளிகளில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 8035 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
அதேபோல சென்செக்ஸ் 229 புள்ளிகள் உயர்ந்து 26867 புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே 26900 புள்ளியை தொட்டது சென்செக்ஸ். மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. சி.என்.எக்ஸ் மிட்கேப் குறியீடு 1.99 சதவீதமும், பிஎஸ்.இ. ஸ்மால்கேப் குறியீடு 133 புள்ளிகளும் உயர்ந்தன.
பேங்க் நிப்டியும் முதல் முறையாக 16000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடிந்தது.
நிப்டி 7000 புள்ளியில் இருந்து 8000 புள்ளிகளை தொடுவதற்கு 78 வர்த்தக தினங்களை மட்டுமே எடுத்துக்கொண்டது.
சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் ஆறு பங்குகள் புதிய உச்சத்தை தொட்டன. ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ், மாருதி சுசூகி இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலிவர், சிப்லா மற்றும் எம் அண்ட் எம் பங்குகள் இதுவரை இல்லாத அளவு உயர்ந்தன. மேலும் டெக் மஹிந்திரா, அர்விந்த், புளு டார்ட் கஜேரியா கெமிக்கல்ஸ் ஆகிய பங்குகள் தங்களுடைய உச்சபட்ச விலையை தொட்டன. மேலும் சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 135 பங்குகள் தங்களுடைய 52 வார உச்சபட்ச விலையை தொட்டன. தேசிய பங்குச்சந்தையில் இருக்கும் 65 பங்குகள் தன்னுடைய 52 வார உச்சபட்ச விலையை தொட்டன.
அதேபோல் ஆட்டோ மற்றும் கன்ஸ்யூமர் டியுரபிள் குறியீடும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து முடிந்தன. பிஎஸ்இ 100, பிஎஸ்இ 200, பிஎஸ்இ 500 ஆகிய குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. எம்.எம்.சி.ஜி. துறை குறியீட்டை தவிர அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தன.
மெட்டல் குறியீடு 2.79%, கேபிடல் குட்ஸ் 2.75%, ரியால்டி 2.72%, பவர் குறியீடு 2.6 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன. எப்.எம்.சி.ஜி. குறியீடு 0.67 சதவீதம் சரிந்தது.
சென்செக்ஸ் இருமடங்கு உயரும்
சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் குறியீடு சென்செக்ஸ். இந்த ஆண்டு நிறுவனங்களின் வருமானமும் நன்றாக இருப்பதால் அடுத்த நான்கு ஆண்டுகளில் சென்செக்ஸ் குறியீடு இரு மடங்காக உயரும் என்றும் பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ஞ் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை 5 சதவீதம்வரை சரியலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது சென்செக்ஸ் உயரும் என்றே அந்த நிறுவனம் கருத்து தெரிவித்திருக்கிறது. நிறுவனங்களின் வளர்ச்சியை சந்தை பிரதிபலிக்கிறது.