Last Updated : 01 Feb, 2019 01:27 PM

 

Published : 01 Feb 2019 01:27 PM
Last Updated : 01 Feb 2019 01:27 PM

நடுத்தர மக்களுக்கு இன்ப அதிர்ச்சி: தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு; ஏராளமான வரிச்சலுகை அறிவிப்பு

மாத ஊதியம் பெறும் ஊதியதாரர்கள், நடுத்தர குடும்பத்தினர் ஆகியோருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், தனிநபர் வருமானவரி உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் தனிநபர் வருமானவரி உச்சவரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தியது. அதாவது, ரூ.50 ஆயிரம் அதிகரித்தது.

அதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக நடுத்தரக் குடும்பத்தினர், ஊதியம் வாங்கும் பிரிவினர் ஆகியோர் வருமானவரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்த்து வந்தனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக எந்தவிதமான அறிவிப்பும் இல்லை.

ஆனால், அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர இருக்கும் நிலையில், பாஜக அரசு தாக்கல் செய்யும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கும், ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏராளமான சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி பட்ஜெட்உரையின் இறுதியில் எதிர்பார்த்தபடியே நடுத்தர குடும்பத்தினருக்கான இன்ப அறிவிப்பை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.

  1. தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.2.50 லட்சத்தில் இருந்து    ரூ.5 லட்சமாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை ஆண்டுக்கு ஊதியம் பெறுபவர்கள் எந்தவிதமான வருமானவரி செலுத்த வேண்டியத் தேவையில்லை.
  2. தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.6.50 லட்சம் வரை இருப்பவர்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.6.50 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்கள், பிஎப், பங்குவர்த்தகம், பரஸ்பர நிதித்திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்தால் வருமானவரி செலுத்தத் தேவையில்லை.
  3. நிரந்தர கழிவுத் தொகை விலக்கு  ரூ.40 ஆயிரமாக இருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் இது, ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  4. அஞ்சல் நிலையங்களில் டெபாசிட் செய்திருப்பவர்கள், வங்கியில் இருந்து டெபாசிட் மூலம் வட்டிவருமானம் பெறுபவர்கள் நிரந்தரக் கழிவு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  5. 80சி மூலம் கழிவு பெறுவது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டுக்கடன் வட்டியாக ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் செலுத்திவருபவர்கள் கழிவு பெறுவது ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  6. வீட்டு வாடகையில் இருந்து பெறும் வரிச்சலுகை ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பு மூலம் 3 கோடி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வரி செலுத்துவோர்கள் பயன் பெறுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x