

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர், தனது பணிக்காலம் முடிந்து செல்லும்போது நிறுவனம் அளிக்கும் பணிக்கொடை(கிராஜுவிட்டி) அளவுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 3ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும் வகையிலான திட்டத்தையும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் 2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் கூறுகையில், " அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பிரதான் மந்திரி ஷரம் யோகி யோஜனா திட்டத்தின் மூலம், மாதம் ரூ.100 செலுத்தினால், 60 வயதுக்குப் பின் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் மட்டும் உள்ளவர்கள் பங்குபெறுவர். இதன் மூலம் அமைப்புசாரா துறையில் இருக்கும் 10 கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.
தொழிலாளர் ஒருவர் நிறுவனத்தை விட்டுச் செல்லும்போது, நிறுவனம் அளிக்கும் பணிக்கொடை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது அடுத்த நிதியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்தார்.
பணிக்கொடை பெற ஒரு நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் குறைந்தபட்சம் 5ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் பணியாற்றி இருக்க வேண்டும்.