மானியவிலை சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

மானியவிலை சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு
Updated on
1 min read

மானியத்துடன் வழங்கப்படும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.1.46 பைசா குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலைகுறைப்பு அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கேஸ் சந்தை விலை மீது விதிக்கப்பட்ட வரியின் விளைவால் தற்போது விலை குறைந்து இருக்கிறது.

அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரின் விலை ரூ.494.99-இல் இருந்து ரூ.493.53-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு வியாழக்கிழமை நள்ளிரவில் இருந்து அமலுக்கு வந்தது. மானிய விலை சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டிருப்பது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி ரூ.6.52 பைசாவும், ஜனவரி 1-ஆம் தேதி ரூ.5.91 பைசாவும் குறைக்கப்பட்டன.

இதேபோல், மானியமில்லாத சமையல் சிலிண்டரின் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.133, ஜனவரி 1-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.120.50 குறைக்கப்பட்டது. புதிய விலையின்படி டெல்லியில் மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.659 ஆக விற்பனை செய்யப்படும்.

சர்வதேச சந்தையில் எல்பிஜி விலை சரிந்ததும், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெறுவதாலும் விலை குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in