

நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்காக புதியபென்ஷன் திட்டம் 2019-20 இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதையடுத்து, 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் இன்று தாக்கல் செய்து வருகிறார். இந்த அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைவதால் முழு பட்ஜெட்டாக அல்லாமல் செலவினங்களுக்கான ஒப்புதல் பெறும் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் பியூஷ் கோயல், நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக புதிய பென்ஷன் திட்டத்தை அறிவித்துள்ளார். பிரதான் மந்திரி ஷரம் யோகி யோஜனா என இந்தத் திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் மாதம் ரூ.100 செலுத்திவந்தால், 60 வயதுக்குப் பின் மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாகப் பெறலாம் என்று அறிவித்தார்.