

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளார். அதேசமயம் அவரது தம்பி அனில் அம்பானி 70 சதவீத சொத்தை இழந்து பின் தங்கியுள்ளார்.
2019-ம் ஆண்டின் உலக பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை ஹூரூன் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் உலக அளவில் முதலிடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 3 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஒராண்டாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளபோதிலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து நல்ல லாபம் ஈட்டியதால் அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
அதேசமயம் அவரது தம்பி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 70 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 48 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு 13 ஆயிரம் கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இரு சகோதரர்களின் தந்தைய திருபாய் அம்பானி மறைவுக்கு பிறகு சொத்து பிரிக்கப்பட்டு இரு சகோதரர்களுக்கும் ஏறக்குறைய சரி சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது. இதில் முகேஷ் அம்பானி கூடுதலாக 30 பில்லியன் டாலர்கள் சொத்துக்களை சம்பாதித்துள்ளார். அதேசமயம் அனில் அம்பானி தான் வைத்திருந்த 7 பில்லியன் டாலர்கள் சொத்துக்களில் 5 பில்லியன் சொத்துக்களை இழந்து விட்டார். தற்போது வெறும் 1.9 பில்லியன் டாலர்கள் மட்டுமே சொத்து உள்ளது.
அனில் அம்பானி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு 450 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு செய்ததால் ஒரு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையில் மேலும் 200 கோடி ரூபாயை திரட்ட ஜியோ நிறுவனத்தின் பாக்கித் தொகையுடன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் அசையா சொத்துக்களை விற்பனை செய்ய அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.