

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சாருக்கு எதிராக, விமான நிலையங்களுக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடாக நடந்துகொண்டதாக ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சார் மீது அரவிந்த் குப்தா என்பவர் 2017-ம் ஆண்டில் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக சிபிஐ தனது ஆரம்பகட்டவிசாரணைகளைத் தொடங்கியது. பின்னர், ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழு, சந்தா கோச்சார் மீது நம்பிக்கை உள்ளதாகவும், இருந்தாலும் அவர் மீது நியாயமான விசாரணை நடத்தப்படும் என்று கூறியது.
அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள்நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் குழு நிர்ணயிக்கப்பட்டது. ஜூன் மாதம் சந்தா கோச்சார்கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். ஸ்ரீகிருஷ்ணா விசாரணை குழுவின் அறிக்கை வருவதற்கு முன்பே கடந்த அக்டோபரில் சந்தாகோச்சார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவருக்குப் பதிலாக சந்தீப் பாக்ஷி தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரத்தில் சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வேணுகோபால் தூத், ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஸ்ரீகிருஷ்ணா விசாரணை குழுவின் அறிக்கையில், சந்தா கோச்சார் வங்கி விதிமுறைகளை மீறியது உண்மைதான் என கூறியது. மேலும் வங்கியின் பொருளாதார நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார் என்றும் கூறியது. இதையடுத்து ஐசிஐசிஐ வங்கிஇயக்குநர் குழு, சந்தா கோச்சாரின்ராஜினாமவை, நிரந்தரப் பணி நீக்கமாக முடிவு செய்தது.
மேலும், 2009 முதல் இதுவரை அவருக்கு வழங்கிய போனஸ் மற்றும் பங்குகளைத் திரும்பப்பெறவும் முடிவுசெய்தது. கடந்த பத்தாண்டுகளில் ரூ. 10 கோடி வரை அவருக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 94 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, ஆய்வு மேற்கொண்ட சிபிஐ சாந்தா கோச்சார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. தீபக் கொச்சார், வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக கடந்த ஆண்டே, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ சார்பில் லுக்அவுட் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன.
வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், சாந்தா கொச்சாருக்கு எதிராக முதல்முறையாக, சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.