

ஒரு பிரச்சினை. இரண்டு பேரோ, அதற்கு மேற்பட்டவர்களோ சந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் வேறுபாடுகளை சமரசம் செய்துகொண்டு ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் எல்லாச் சந்திப்புகளின் குறிக்கோள். இதன் அடிப்படையில், “பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்தன” அல்லது “பேச்சு வார்த்தைகள் இழுபறி”, “பேச்சு வார்த்தைகள் தோல்வி” என்று சொல்கிறோம். ஆனால், “பேச்சு வார்த்தை” என்கிற இந்தச் சொல் பிரயோகமே தவறானது.
ஏன்?
கருத்துப் பரிமாற்றத்தை, ஆங்கிலத்தில் communication என்று சொல்கிறோம். Communicate என்றால் பகிர்ந்துகொள்ளுதல், கொடுத்தல், வெளிப்படுத்துதல் என்று பல அர்த்தங்கள். என்ன பகிர்ந்து கொள்கிறோம், என்ன கொடுக்கிறோம், என்ன வெளிப்படுத்துகிறோம்? நம் எண்ணங்களை, கருத்துக்களை! இரண்டு பேர் பங்கெடுத்தால், அது இருவழிக் கருத்துப் பரிமாற்றம் (Two-way communication): இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்தால், பல்வழிக் கருத்துப் பரிமாற்றம் (Multi-way communication).
நாம் இதை எப்படிச் செய்கிறோம்? மொழி மூலமாக, வார்த்தைகள் மூலமாக. அதனால்தான், பேச்சு வார்த்தை என்று சொல்கிறோம்.
”இது சரிதானே? இதில் குற்றம் என்ன கண்டாய் கொற்றவனே?” என்று கேட்கிறீர்களா?
கருத்துப் பரிமாற்றத்தில் மொழி, வார்த்தைகள் ஆகிய இரண்டு அம்சங்கள் மட்டுமே இருக்கின்றன என்று நாம் நினைக்கிறோம்.
இந்த அனுமானம் தவறு என்று மேனேஜ்மென்ட் அறிஞர்களும், மனோதத்துவ மேதைகளும் சொல்கிறார்கள்; சோதனைகள் மூலமாக நிரூபிக்கிறார்கள். அந்த மூன்றாவது முகம் - உடல்மொழி.
நாம் ஒரு கருத்தைச் சொல்லும்போது, இந்த மூன்று அம்சங்களும், அதைக் கேட்பவரிடம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகின்றன? நாம் ஏற்படுத்தும் தாக்கம் 100 சதவிகிதம் என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு அம்சமும் எத்தனை பாதிப்பை ஏற்படுத்தும்?
7 % தாக்கம் – என்ன சொல்கிறோம்?
38% தாக்கம் – எப்படிச் சொல்கிறோம்?
55 % தாக்கம் – வார்த்தைகளே இல்லாத உடல்மொழி
இவை ஒவ்வொன்றும் என்னவென்று பார்ப்போம்.
என்ன சொல்கிறோம்? – மொழி, வார்த்தைகள்
எப்படிச் சொல்கிறோம்? – தொனி, குரல், ஓசை
வார்த்தைகளே இல்லாத உடல் மொழி – முக பாவங்கள், உடல் அசைவுகள், சைகைகள்.
என்ன சொல்கிறோம்?
நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள். முக்கியமான ஒருவரைச் சந்திக்க அவசரமாக வெளியே போகவேண்டும். நெருங்கிய நண்பர் வருகிறார். என்ன சொல்வீர்கள்?
நான் அவசரமா வெளியிலே போறேன். அப்புறம் பார்க்கலாமா?
இதுவே, மளிகைக் கடைக்காரப் பையன் பணம் வாங்க வந்தால் என்ன சொல்வீர்கள்?
வெளியிலே போறேன். அப்புறமா வாப்பா.
டொனேஷன் கேட்க ஒருவர் வருகிறார். என்ன சொல்லுவீர்கள்?
போ, போ, நேரம், காலம் தெரியாம வந்துட்டே.
இனிமையான அல்லது கடுமையான வார்த்தைகளால் வரும் பாதிப்புகள் நாம் எல்லோரும் அறிந்தவை.
எப்படிச் சொல்கிறோம்?
சொல்லும் குரல், தொனி ஆகியவற்றால் இந்த வார்த்தைகளின் அர்த்தத்தையே முழுக்க மாற்றிவிடலாம்.
* உங்கள் பேச்சின் சப்தத்தை உயர்த்தாமல் சாதாரணத் தொனியில் பேசுங்கள். இது கேட்பவருக்கு மரியாதை தரும் பேச்சு.
* உங்கள் பேச்சின் சப்தத்தை அதிகமாக்குங்கள் அல்லது தொனியைக் கரகரப்பாக்குங்கள். மரியாதைப் பேச்சு இப்போது மிரட்டும் பேச்சாகிவிடும்.
அதே வார்த்தைகளை வித்தியாசத் தொனி, உரத்த குரல் ஆகியவற்றால், முழுக்க முழுக்க மாற்றிவிடமுடியும். இதைப் புரிந்துகொள்ள ஒரு ஈஸி வழி சொல்லட்டுமா?
நான் அவசரமா வெளியிலே போறேன். அப்புறம் பார்க்கலாமா? என்பதுபோன்ற ஒன் லைன் டயலாக் எழுதிக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டுக் கண்ணாடி முன் நின்றுகொள்ளுங்கள்.
கமல்ஹாஸனாகப் பேசுங்கள். இது மரியாதைப் பேச்சு.
சத்யராஜாகப் பேசுங்கள். இது நக்கல் பேச்சு.
பிரகாஷ்ராஜாகப் பேசுங்கள். இது வில்லன் பேச்சு.
சந்தானமாகப் பேசுங்கள். இது காமெடிப் பேச்சு.
ஒரே வார்த்தைகள். குரல் ஏற்ற இறக்கமும், தொனியும் ஹீரோக்களை வில்லன்களாக்கும்; காமெடியன்களாக்கும்; வில்லன்களை ஹீரோக்களாக்கும்.
உடல் மொழி
உங்கள் வீட்டிலோ, அலுவலகத் திலோ ஒருவர் பெரிய தவறு செய்துவிட்டார். உங்களுக்கு நியாயமான, அடக்கமுடியாத கோபம். அவரைக் கண்டிக்கவேண்டும், தண்டிக்கவேண்டும். என்ன செய்வீர்கள்? கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவீர்கள். (உங்களுக்குத் தெரியாது, வார்த்தைகள் 7 சதவிகித தாக்கம் மட்டுமே ஏற்படுத்தும் என்று.)
உரத்த குரலில் கத்துவீர்கள். (உங்களுக்குத் தெரியாது, குரல் 38 சதவிகிதத் தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும் என்று.)
கருத்துப் பரிமாற்றம் பற்றி அறிந்தவன் சாதாரண வார்த்தைகளில், குரலையே உயர்த்தாமல் பேசுவான். ஆனால், தன் முகபாவங்களில், உடல் அசைவுகளில் ஆயிரம் வசனம் சொல்லுவான், தன் கோபத்தைக் கேட்பவர் நெஞ்சுக்குள் சொருகுவான். ஏன்? 55 சதவிகிதத் தாக்கத்தைத் தன் உடல்மொழி உருவாக்கும் என்று அவனுக்குத் தெரியும்.
கருத்துப் பரிமாற்றம் வெற்றி பெற வேண்டுமானால், நம்மை நாம் அறிந்தால் மட்டும் போதாது. நாம் யாரோடு பேசுகிறோமோ, அவர்களுடைய சொல், தொனி, உடல் மொழிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இது கடினமல்ல. இதற்குத் தேவை மனோதத்துவ ஞானமல்ல, கூர்ந்து கவனிக்கும் பழக்கம்.
உடல்மொழி ஒரு சங்கேத மொழி. அனிச்சைச் செயலாக வருவது. பயன்படுத்தும் வார்த்தைகள், குரல் ஆகியவற்றில் நம்மோடு பேசுவோர் தங்கள் உணர்ச்சிகளை மறைத்துவிட முடியும். ஆனால், அவர்களுடைய முகபாவங்களை, உடல் அசைவுகளைக் கவனிப்பதன் மூலம் அவர்களுடைய நிஜ உணர்ச்சிகளை, எண்ணங்களை நாம் புரிந்துகொள்ள முடியும்.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
என்று திருவள்ளுவர் இதைத்தான் அன்றே சொன்னார். அதாவது. பக்கத்தில் இருக்கும் பொருட்களைக் கண்ணாடி தெளிவாகப் பிரதிபலிக்கும். அதேபோல், மனத்தின் உணர்ச்சிகளை முகபாவங்கள் மறைக்காமல் வெளிப்படுத்தும்.
பெரும்பாலானோர் வெளிப்படுத்தும் உடல் மொழிகளும் அவற்றின் அர்த்தங்களும் இதோ:
உங்கள் அலுவலகத்தில் சக ஊழியரோடு ஒரு கருத்தை விவாதித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
அவர் கண்கள் உங்கள் கண்களையே பார்த்துக் கொண்டிருக்கின்றனவா? - உங்கள் கருத்தை அவர் உன்னிப்பாகக் கேட்கிறார். அவர் கண்கள் அலை மோதுகின்றனவா, தலையைச் சரித்தபடி கேட்கிறாரா? - உங்கள் பேச்சு அவருக்கு போரடிக்கிறது.
நெஞ்சில் கை கட்டியபடி பேச்சைக் கேட்கிறாரா? - உங்கள் கருத்தை ஒப்புக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. அடிக்கடி காதைத் தடவுகிறாரா, தாடையைச் சொறிகிறாரா? – உங்கள் பேச்சை அவர் நம்பவில்லை.
இந்த உதாரணங்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான். விவரமாகத் தெரிந்துகொள்ள வேண் டுமா? இநதப் புத்தகம் உங்களுக்கு உதவும்:
The Definitive Book of Body Language
ஆசிரியர் - Barbara Pease
slvmoorthy@gmail.com