

140 வருடப் பாரம்பரியம் கொண்ட தி இந்து குழுமத்திலிருந்து பிசினஸ் நாளிதழாக வெளிவரும் ‘பிசினஸ் லைன்’ இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
‘பிசினஸ் லைன்’ 18 பதிப்புகளாக அச்சிடப்பட்டு இந்தியாவின் நான்கு திசைகளிலும் வெளியிடப்பட்டுவருவதன் மூலம் இந்தியா முழுவதுக்குமான பிசினஸ் நாளிதழாக திகழ்கிறது. இந்தியாவில் அதிகம் வாசிக்கப்படும் பிசினஸ் நாளிதழ்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ‘இந்திய வாசகர்கள் ஆய்வு 2017’ அறிக்கையின்படி 7.75 லட்சம் பேர் ‘பிசினஸ் லைன்’ நாளிதழின் வாசகர்களாக உள்ளனர்.
இந்த 25 வருடங்களில் ‘பிசினஸ் லைன்’ நாளிதழ், சுதந்திரமான, நம்பகத்தன்மை மிக்க, மிக விரிவான பிசினஸ் செய்திகளைத் தரும் நாளிதழ் என்ற பெருமைமிக்க நற்பெயரைப் பெற்றுள்ளது. ‘பிசினஸ் லைன்’ நாளிதழின் வளர்ச்சி, இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின் நடந்த பல வியத்தகு பொருளாதார மாற்றங்களோடு தொடர்புடையது என்று சொல்லலாம்.
‘பிசினஸ் லைன்’ நாளிதழ் செய்திகள் மட்டுமல்லாமல், ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், ஏவியேஷன், ஆரோக்கியம், வேலைவாய்ப்பு என வாசகர்களுக்குத் தேவையான விஷயங்களை அலசும் இணைப்பிதழ்களையும் வாசகர்கள் விரும்பத்தக்க வகையில் வழங்கிவருகிறது. பொருளாதாரம் குறித்தும் தொடர்ந்து அலசல் கட்டுரைகளைப் பிரசுரித்து வருகிறது. விவசாயம் மற்றும் நுகர்பொருட்கள் குறித்து அலசுவதில் முன்னணி பத்திரிகையாகவும் இது பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனுடன் வார இறுதி இதழாக வெளிவரும் பிலிங்க், செய்திகளைத் தாண்டி கலை, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் அரசியல் உள்ளிட்ட விஷயங்களை மிகவும் சுவாரஸ்யமாக வழங்கிவருகிறது.
‘பிசினஸ் லைன்’ நாளிதழில் உள்ள முதலீடுகள் தொடர்பான கட்டுரைகளும், பரிந்துரைகளும் பல ரிசர்ச் அனலிஸ்ட்டுகளால் அங்கீகரிக்கப்பட்டவை. இவை நிபுணத்துவம் பெற்றவர்கள் மூலம் எழுதப்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு தரக் குறியீடுகளும் வழங்கிவருகிறது.
‘பிசினஸ் லைன்’ நாளிதழின் பயணம் குறித்து அதன் ஆசிரியர் ராகவன் ஸ்ரீனிவாசன் கூறியதாவது, “நம்முடைய பிறப்பு இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கிய காலத்தோடு தொடர்புடையவை. இந்தியா வளர்ந்த கதையை, 1996-ல் இணையதளத்தைத் தொடங்கி, உலக அளவில் முதலில் கொண்டு சென்றது ‘பிசினஸ் லைன்’. இணையதளம் தொடங்கிய இந்தியாவின் முதல் பிசினஸ் நாளிதழ் இது. தொடர்ந்து வாசகர்களுக்கு நம்பகமான தகவல்களை, ஆய்வுசெய்து வழங்கிவருவதில் உறுதியுடன் செயல்பட்டுவருகிறோம்” என்றார்.