

கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம் அனந்தபூரில் கட்டப்பட்டுள்ள புதிய ஆலையில் சோதனை ரீதியிலான உற்பத்தியை தொடங்கியது. இத் தொழிற்சாலையை நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு தொடங்கி வைத்தார். அப்போது, `சோல்’ பேட்டரி காரை சந்திரபாபு நாயுடு ஓட்டிப்பார்த்தார்.
இவ்விழாவில் அவர் பேசிய தாவது: தொழிற்சாலைகளின் முகவரியாக அனந்தபூர் விளங்கி வருகிறது. வறட்சி மாவட்டமான இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் வந்ததால், வேலை வாய்ப்பு பெருகி உள்ளது. புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதில் நாட்டிலேயே ஆந்திர மாநிலம் முதல் இடம் வகிக்கிறது. ஆந்திரா தற்போது மோட்டாஸ் நிறுவனங்கள் விரும்பும் இடமாக மாறியுள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் சுஸுகி, அசோக் லேலண்ட், அப்பல்லோ டயர்ஸ் ஆகிய தொழிற்சாலைகள் வந்துள்ளன. விரையில் ‘ஹீரோ மோட்டார்ஸ்’ வர உள்ளது என்றார்.
சர்வதேச அளவில் கார் உற்பத்தியில் 8-வது பெரிய நிறுவனமாக கியா மோட்டார்ஸ் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் 15-வது ஆலை இதுவாகும். இது 536 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது. ஹூண்டாய் நிறுவனத் தின் துணை நிறுவனமாகும் இது. இந்த ஆலை ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்த ஆலை மூலம் 3 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 7 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும். 200 கோடி டாலரை இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது. நவீனமயமாக உருவாக்கப்படும் இந்த ஆலையில் முக்கியமான பணிகளுக்காக 300 ரோபோட்டுகளும் பயன்படுத்தப் படுகின்றன.