

ரிசர்வ் வங்கி தன்வசம் எவ்வளவு உபரி நிதியை இருப்பில் வைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பாக நியமிக்கப்பட்ட பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
உபரி நிதி குறித்து மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறு பாடுகளைப் போக்குவதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமை யில் ஒரு குழு அமைக்கப்பட் டது. இக்குழு ரிசர்வ் வங்கி எவ்வளவு உபரிநிதியை வைத்துக் கொள்ளலாம் என்பதையும், அரசுக்கு எவ்வளவு ஈவுத் தொகை (டிவிடெண்ட்) அளிக்கலாம் என்பதையும் ஆராய்ந்து தனது அறிக்கையை அளிக்கும். ஆறு பேரடங்கிய குழுவின் முதலாவது கூட்டத்திலிருந்து 3 மாதங்களுக்குள் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று குழு அமைக்கப்பட்டபோது கூறப் பட்டது. இதன்படி ஏப்ரல் மாதத்தில் இக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்குழு உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் எத்தகைய நடைமுறை யைப் பின்பற்றுகின்றன என்பதை ஆராய்ந்து அவற்றில் சிறந்த நடை முறையைப் பரிந்துரைக்கும்.
ரிசர்வ் வங்கி தனது மொத்த நிதி ஆதாரத்தில் 28 சதவீதத்தை உபரி நிதியாக கையிருப்பில் வைத்துள்ளது. மத்திய அரசு இந்த நிதி அளவை 14 சதவீதம் போதும் என கருதுகிறது. நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த உபரி நிதியை விடுவிக்குமாறு கூறியதில் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இதைப் போக்க நவம்பர் 19-ம் தேதி பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் பொருளாதார விவகாரத்துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க், மற்றும் ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர் குழு உறுப்பினர்களான பாரத் தோஷி, சுதிர் மன்கட், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் என்.எஸ். விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கு முன்பு 1997-ம் ஆண்டு வி. சுப்ரமணியம் தலைமயிலான குழு, 2004-ம் ஆண்டில் உஷா தோரட் தலைமையிலான குழு மற்றும் 2013-ல் மாலேகம் தலைமயிலான குழு ரிசர்வ் வங்கி உபரி நிதி குறித்து அறிக்கை அளித்துள்ளது.
இதில் சுப்ரமணியம் குழு 12 சத வீத இருப்பு போதுமானது என்றும், பற்றாக்குறையை சமாளிக்க 18 சதவீத இருப்பு அவசியம் என்று உஷா தோரட் குழுவும் பரிந்துரைத் திருந்தது. லாபத்தில் உரிய பங்கை ஆண்டுதோறும் அவசர கால தேவையை சமாளிக்க வைத்துள்ள உபரி நிதி தொகுப்பில் சேர்த்து விடலாம் என்று மாலேகம் குழு சுட்டிக் காட்டியிருந்தது.