

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பிரியாணிக்கு புகழ் பெற்ற அஞ்சப்பர், புஹாரி, ஜூனியர் குப்பண்ணா, அசீப் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாகட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் பெருமளவு கிளைகள் பரப்பி வளர்ந்து வருகின்றன. சென்னையை தவிர மற்ற பல நகரங்களிலும் பிரியாணி விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பிரியாணி விற்பனையில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் மேல் வர்த்தகம் செய்கின்றன.
இவை மட்டுமின்றி அமைப்பு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள், அந்தபகுதிகளில் மட்டும் உள்ள உள்ளூர் கடைகள் மூலம் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பிரியாணி விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு பிரியாணி மூலம் 4,500 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பெரு நிறுவனங்களை பொறுத்தவரையில் ஒவ்வொன்றும் மாதத்துக்கு 25 லட்சம் ரூபாய் என்ற அளவில் பிரியாணி மூலம் வர்த்தகம் செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் என்ற அளவில் ஒரு நிறுவனம் பிரியாணியை வர்த்தகம் செய்ய முடிகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரு நிறுவனங்கள் நடத்தும் கடைகளில் பிரியாணி 180 ரூபாய் முதல் 600 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் அமைப்பு சாரா உள்ளூர் கடைகளில் விற்கப்படும் பிரியாணி 50 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நாளொன்றுக்கு 10 முதல் 15 கிலோ என்ற அளவில் பிரியாணி (ஒரு கிலோ பிரியாணியை 8 முதல் 10 பேர் சாப்பிடலாம்) தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களும் கணிசமான லாபம் ஈட்டி வருகின்றன. சிறிய கடைகளில் அரை பிளேட் பிரியாணி 70 முதல் 90 ரூபாய்க்கும், கால் பிளேட் பிரியாணி 40 ரூபாய் முதல் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தமிழகத்தில் பிரியாணி தொழில் வளர்ந்து வருவது குறித்து தலப்பாகட்டி நிர்வாக இயக்குநர் சதீஷ் நாகசாமி கூறுகையில் ‘‘தமிழகம் முழுவதும் பிரியாணி தொழில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சந்தை விரிவடைந்து வருவதால் தேவையும் உயர்ந்து வருகிறது. நாள்தோறும் 4 ஆயிரம் கிலோ பிரியாணியை நாங்கள் தயாரிக்கிறோம். தமிழகம் முழுவதும் இதனை 40 ஆயிரம் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு செல்கின்றனர். எங்கள் நிறுவனத்தை பொறுத்தவரையில் மேலும் 100 கடைகள் திறந்தாலும், அதற்கு தேவையான அளவு வர்த்தகம் நடைபெறும் அளவுக்கு தற்போது தேவை உள்ளது’’ எனக் கூறினார்.
இதுபோலவே அசீப் பிரியாணி நிர்வாக இயக்குநர் திலிப் குமார் கூறுகையில் ‘‘நாள்தோறும் 30 ஆயிரம் பேர் சாப்பிட்டு செல்கின்றனர். திருப்தியான சாப்பாடு என்பதால் மக்கள் பிரியாணியை விரும்புகின்றனர்’’ எனக் கூறினார்.
எனினும் பிரியாணி தொழிலை பொறுத்தவரை சில சவால்களும் உள்ளன. பெருமளவும் குடும்பம் சார்ந்த தொழில் என்பதால் முடிவெடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. சுவை மாறினால் வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை, சமையலுக்கு அதிகமான தொழிலாளர்களை சார்ந்து இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன.