இரண்டாம் நாளாக பங்குச்சந்தைகள் சரிவு: ரூபாய் மதிப்பும் சரிந்தது

இரண்டாம் நாளாக பங்குச்சந்தைகள் சரிவு: ரூபாய் மதிப்பும் சரிந்தது
Updated on
1 min read

முதலீட்டாளர்களிடையே லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு அதிகரித்தது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை முன் கூட்டியே அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகி இருக்கும் காரணங்களால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தன.

சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 27057 புள்ளியிலும், நிப்டி 58 புள்ளிகள் சரிந்து 8094 புள்ளியிலும் முடிவடைந்தன. ஆனால் அதே சமயத்தில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சிறிதளவு உயர்ந்து முடிவடைந்தன.

துறை வாரியாக பார்க்கும் போது ரியால்டி மற்றும் பவர் குறியீடுகளை தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிவடைந்தன. இதில் கன்ஸ்யூமர் டியுரபிள் குறியீடு 1.56 சதவீதம் சரிந்து முடிவடைந்தது. மேலும் எப்.எம்.சி.ஜி. 1.48%, ஐ.டி. 1.06 சதவீதம் சரிந்து முடிந்தன.

ரியால்டி குறியீடு 0.61 சதவீதமும் பவர் குறியீடு 0.11 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் பங்குகளில் எஸ்.எஸ்.எல்.டி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன. மாறாக கோல் இந்தியா, ஹீரோமோட்டோ கார்ப், ஐடிசி, ஹெச்.டி.எப்.சி. மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன. செவ்வாய்கிழமை இந்திய பங்குச்சந்தையில் 479 கோடி ரூபாய்க்கு அந்நிய முதலீடு இருந்தது.

சர்வதேச நிலவரம்

ஆசியாவில் ஜப்பான் நாட்டு பங்குச்சந்தையை தவிர மற்ற அனைத்து நாடுகளின் பங்குச்சந்தையும் சரிந்து முடிவடைந்தன. ஜப்பானின் நிக்கி 0.25 சதவீதம் உயர்ந்தது. ஷாங்காய் காம்போசிட் 0.4 சதவீதமும், ஹேங்செங் 2 சதவீதமும் சரிந்து முடிந்தது. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக சரிந்தன.

ரூபாய் சரிவு

தொடர்ந்து இரண்டாவது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே ஒரு டாலர் 61.04 ரூபாய்க்கு சென்றது. வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 60.96 ரூபாயில் முடிவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in