

வால்மார்ட் நிறுவனத்திடம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகைக்காக சச்சின் பன்சால் 699 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ள விவரம் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் ஒன்றான பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீதப் பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் கடந்த ஆண்டு வாங்கியது. பிளிப்கார்ட்டின் சொத்து மதிப்பு சுமார் 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய். இதில் 77 சதவீதப் பங்குகளை வாங்க வால்மார்ட் வாங்கியுள்ளது. எனவே சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.
பிளிப்கார்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அதன் நிறுவனர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகிய இருவரும் மிகக் குறைவான பங்குகளை மட்டுமே வைத்திருந்தனர். நிறுவனத்தின் பங்குகள் பலருக்கும் பிரித்து தரப்பட்டு இருந்தது. எனவே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதால் அவரது பங்குகளுக்கு ஏற்ப தொகை பிரித்தளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான உடன் இதற்கான வருமான வரியைச் செலுத்துமாறும், அதுதொடர்பான விளக்கம் அளிக்குமாறும் கூறி வருமான வரித்துறை சார்பில் சச்சின், பின்னி மற்றும் வால்மார்ட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து முதல்கட்டமாக வால்மார்ட் நிறுவனம் 7,439 கோடி ரூபாயை முன்கூட்டி செலுத்தப்படும் வருமான வரியாகச் செலுத்தியது. இதனையடுத்து ஒப்பந்தத் தொகை மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட தொகை, மூலதன ஆதாயம் பெற்றவர்கள் உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு வால்மார்ட் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் வால்மார்ட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்காக சச்சின் பன்சால் 699 கோடி ரூபாயை முன்கூட்டியே வருமான வரியாகச் செலுத்தியுள்ளார். மூலதன ஆதாயத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவில் அதிகபட்சமாக 40 சதவீதம் வரை வருமான வரி விதிக்கப்படுகிறது. எனினும் பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை குறித்து சச்சின் பன்சால் தரப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
அதேசமயம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான பின்னி பன்சால் எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. ‘மீ டூ’ புகார் எதிரொலியாக பிளிப்கார்ட் நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகியுள்ள அவர், தான் பெற்ற தொகை, அதற்கான வரி என எதையும் இதுவரை வெளியே தெரிவிக்கவில்லை.