Published : 02 Jan 2019 03:53 PM
Last Updated : 02 Jan 2019 03:53 PM

மீண்டும் ஜிஎஸ்டி வரி குறைப்பு?- இனி புது வீடுகளுக்கு 5% வரி

விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அடுத்த அதிரடி ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்புகள் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்படும் எனத் தெரிகிறது.

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் 28 சதவீத வரியின் கீழ் உள்ள பல பொருட்களின் வரி விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, டிஜிட்டல் கேமிரா, விடியோ கேமிரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

வாகனங்களில் 3ஆம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

32 அங்குலம் வரை கொண்ட டிவி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு புத்தாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தநிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜனவரி 10-ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிகஅளவு  மக்கள் பயன்படும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக கட்டுமானத் தொழிலை கடுமையாக பாதிக்கும் ஜிஎஸ்டி வரி விகித்தில் மாற்றங்கள் செய்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

கட்டுமான நிலையில் உள்ள வீடுகளுக்கு தற்போது 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனால் கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரி விதிப்பு காரணமாக வீடு வாங்கும் நடுத்தர குடும்பங்களும் கடும் சுமையை சந்தித்து வருகின்றன. எனவே வீடு வாங்குவோர் பயனடையவும், கட்டுமான தொழிலுக்கு ஊக்கம் அளிக்கவும் கட்டுமான நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அத்துடன் ஜிஎஸ்டி வரியில் கட்டுமான துறையினருக்கு சில சலுகைகளும் அளிக்கப்படலாம் என கருதப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு சிறு மற்றும் குறுந்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் உள்ளதால் இதிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிறு குறு தொழில்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரைக்கும் தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது. ஜனவரி 10-ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x