Published : 25 Sep 2014 10:47 AM
Last Updated : 25 Sep 2014 10:47 AM

ஆசியாவின் மிகப்பெரிய உணவு பூங்காவை பெங்களூரில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஆசியாவின் மிகப்பெரிய உணவு பூங்காவை கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்துள்ள தும்கூரில் புதன்கிழமை பிர‌தமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த உணவு பூங்கா, எதிர்காலத்தில் கர்நாடக விவசாயிகளின் வாழ்க்கை தரம் ஏற்றம் பெறுவதற்கு பெரிதும் உதவும்.

சுமார் 110 ஏக்கரில் ரூ.140 கோடி மதிப்பில் உருவாகியுள்ள இந்த உணவு பூங்கா நேரடியாக 6,000 விவசாயிகளுக்கும்,மறைமுகமாக 25,000 விவசாயிகளுக்கும் உதவக்கூடியது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

கர்நாடக முதல்வர் சித்தராமையாவும்,நானும் வேறு கட்சியினராக இருக்கலாம், ஆனால் நாட்டின் நலனுக்காக ஒன்றாக இங்கு வந்துள்ளோம்.நாட்டின் முன்னேற்றத்துக்கு அனைத்து கட்சி முதல்வர்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.கட்சிகள் வேறு வேறாக இருந்தாலும் நாடு ஒன்று தான் என்பதை மறக்கக்கூடாது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்படவில்லை.காங்கிரஸ் கட்சி ஆண்ட மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு உதவி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த‌து.அனைத்து மாநிலங்களையும் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு செயல்பட்டு வருகிறது.

உணவு மற்றும் விவசாய பொருட்கள் வீணாவதை தடுத்தாலே ஆண்டுக்கு ரூ 40 ஆயிரம் கோடி நாட்டுக்கு வருமானம் கிடைக்கும். வருகின்ற டிசம்பர் மாதம் முதல் இந்த உணவு பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். உணவுப் பூங்காவில் நிறுவப்பட இருக்கிற குளிர்பான நிறுவனங்கள் தங்களுடைய குளிர்பானத்தில் 5 சதவீதம் பழச்சாறு சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது நிறைவேறினால் பழ விவசாயிகளின் ஆண்டு வருமானம் உயரும் .இதன் மூலம் இன்னலுறும் விவசாயிகளின் வாழ்க்கைக்கு ஓரளவுக்கு உதவ முடியும்''என்றார்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x