

பாசுமதி அரிசி ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியால் ஹரியாணா மாநில விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்றுமதி சரிவுக்கு இராக் உள்நாட்டுக் கலவரம் மற்றும் ஈரானின் இறக்குமதி கொள்கைகளும் காரணமாகும்.
விவசாயிகளுக்கு அதிக லாபம் அளிப்பதில் முக்கியமானது பாசுமதி அரிசியாகும். 165 நாடுகளுக்கு ஏற்றுமதியானாலும், பெரும்பான்மையான அளவு ஈரான் மற்றும் இராக்கிற்கு அனுப்பப்படுகிறது. ஆனால், தற்போது இராக்கில் நிலவும் உள்நாட்டுக் கலவரம் மற்றும் ஈரானின் விவசாயிகள் நலன் கருதி அங்கு அமலாக்கப்பட்டுள்ள புதிய இறக்குமதிக் கொள்கை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் பாசுமதி அரிசி ஏற்றுமதி அதிகம் குறைந்து விட்டது.
இது குறித்து `தி இந்து’விடம் மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறுகையில், ‘ஈரானின் பாசுமதி அரிசித் தேவையில் 80 சதவிகித அளவை இந்தியா பூர்த்தி செய்து வந்தது. அங்கு பத்து சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரியை உயர்த்தப்பட்டு விட்டதால், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏற்றுமதி 12 சதவிகிதம் குறைந்து விட்டது. இது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவில் இருந்து ஒரு குழு அடுத்த மாதம் ஈரான் செல்ல இருக்கிறது,’ எனத் தெரிவித்தனர்.
இதேபோல், மற்றொரு முக்கிய நாடான இராக்கில் உள்நாட்டுக் கலவரம் முடிவுக்கு வரும் வரையில் பிரச்சினை முடிய வாய்ப்பில்லை. எனவே அதுவரை பாசுமதியை அதிகமான அளவில் பயன்படுத்தும் மற்ற நாடுகளான சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிற இஸ்லாமிய நாடுகளை இந்தியா நம்பியிருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் பிரச்சினையான பாசுமதி
வட மாநிலங்களில் பாசுமதி அரிசியை விளைவிக்கும் மாநிலங்களாக உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகியவை உள்ளன. இதில், ஹரியாணாவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி சரிவை எதிர்கட்சிகள் தேர்தல் பிரச்சினையாக்கி எழுப்பத் துவங்கி விட்டனர். இதனால், காங்கிரஸ் ஆளும் அம்மாநில முதல் அமைச்சரான பூபேந்தர் சிங் ஹுடா இது குறித்து பிரதமர் நரேந்தர மோடிக்கு கடந்த 22 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்த வருடம் பெய்த அதிகமான மழையால் பாசுமதி அரிசியின் விளைச்சல் அதிகமானதாகவும், அதேசமயம் ஏற்றுமதி சரிவு காரணமாக விலையில் குவிண்டாலுக்கு ரூபாய் 1000 முதல் 1500 வரை குறைந் ததால் ஹரியாணா விவசாயிகள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட் டுள்ளார். இந்த பிரச்சினையில், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன் பாசுமதி ஏற்றுமதியால் நம் நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலவாணியும் பாதிக்கப்படும் எனச் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
நெல் வாங்க ஆளில்லை
இதை ஆமோதிக்கும் வகையில், ஹரியாணா மாநிலத்தின் விவசாய சந்தையில் 1509 வகையான பாசுமதி நெல் ரகங்கள் வந்து இறங்கியுள்ளன. அதன் விலையில் ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் ஆயிரம் வரை குறைந்தும் வாங்க வியாபாரிகள் எவரும் முன்வரவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.