Published : 26 Sep 2014 11:02 AM
Last Updated : 26 Sep 2014 11:02 AM

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: 8000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது நிப்டி

எரிவாயு விலை நிர்ணயம் செய்வதைத் தள்ளிப்போட்டது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுக்க நினைத்தது மற்றும் செப்டம்பர் மாதம் எப் அண்ட் ஓ முடிவு ஆகிய காரணங்களால் வியாழன் அன்று பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன.

தேசிய பங்குச் சந்தை (நிப்டி) 8000 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 90 புள்ளிகள் சரிந்து 7911 புள்ளியில் முடிவடைந்தது. செப்டம்பர் 1-ம் தேதி நிப்டி முதல் முறையாக 8000 புள்ளிகளை தொட்டது. இப்போது 8000 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 7877 புள்ளிகளுக்கு சென்றது.

இதேபோல மும்பை பங்குச் சந்தையும் (சென்செக்ஸ்) 276 புள்ளிகள் சரிந்து 26468 புள்ளியில் முடிவடைந்தது. முக்கிய குறியீடுகள் மட்டுமல்லாமல் மிட்கேப் ஸ்மால்கேப் குறியீடுகளும் சரிந்து முடிவடைந்தன. மிட்கேப் குறியீடு 1.96 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 3.21 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஹெல்த்கேர் துறைகளைத் தவிர மற்ற அனைத்து துறைகளும் சரிந்து முடிவடைந்தன. குறிப்பாக ரியால்டி குறியீடு அதிகபட்சமாக 3.21 சதவீதம் சரிந்தது. இதற்கடுத்து எண்ணெய் எரிவாயு மற்றும் உலோக குறியீடுகளும் சரிந்தன.

சென்செக்ஸ் பங்குகளில் டாக்டர் ரெட்டீஸ், டிசிஎஸ், கெயில், சிப்லா மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தும், ஆக்ஸிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹிண்டால்கோ, பி.ஹெச்.இ.எல். மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன. புதன் கிழமையன்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 793 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தையில் இருந்து தங்களது முதலீட்டினை வெளியே எடுத்திருக்கிறார்கள்.

ஆந்திரா வங்கி பங்கு சரிவு

உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு காரணமாக, சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு கடன் கொடுத்திருந்த வங்கிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆந்திரா வங்கி 14 நிறுவனங்களுக்கு 4,346 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த வங்கியின் தலைவர் சிவிஆர் ராஜேந்திரன் தெரிவித்தார். இதனால் இந்த பங்கு 12.11 சரிந்து 63.15 ரூபாயில் முடிவடைந்தது.

மெட்டல் பங்குகள் இன்றும் சரிவு

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக மெட்டல் துறை பங்குகள் இன்றும் சரிந்து முடிவடைந்தன. உஷா மார்டீன் பங்கு 19.97 சதவீதமும், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் 17.94% மோனட் இஸ்பெட் 11.10% ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் 7.83 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x