

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் முன்னெப்போதும் இல்லாத அளவாக 22764 புள்ளிகளைத் தொட்டது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் 136 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் அதிகபட்ச நிலையை எட்டியது.
கடந்த வியாழக்கிழமை அதிகபட்சமாக 351 புள்ளிகள் உயர்ந்தது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தையில் 38 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 6817 புள்ளிகளானது. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியதால் பங்குச் சந்தையில் தொடர்ந்து காளையின் சீற்றமே காணப்படும் என்று பங்குச் சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மக்களவைத் தேர்தலில் தொழில்துறையினருக்கு சாதகமான பாஜக-வின் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமடைந்து வருவதும் பங்குச் சந்தை உயர் வுக்குக் காரணமாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஸ்டெர்லைட் நிறுவன பங்கு அதிகபட்சமாக 4.78 சதவீதம் உயர்ந்து ரூ. 201.80-க்கு விற்பனையானது. கோவா மாநிலத்தில் சுரங்கப் பணிகளைத் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்நிறு வன பங்குகளின் விலை உயர்ந்தது. லார்சன் அண்ட் டியூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், பிஹெச்இஎல், ஹீரோ மோட்டோகார்ப், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனப் பங்குகளின் விலையும் கணிசமாக உயர்ந்தன. முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 18 நிறுவனப் பங்குகளின் விலைகள் உயர்ந்தன.
விப்ரோ நிறுவனப் பங்கு அதிகபட்சமாக 6.65 சதவீத சரிவைச் சந்தித்து ரூ. 546.60-க்கு விற்பனையானது. ஹிந்துஸ்தான் யூனி லீவர் பங்கு 1.69 சதவீதம் சரிந்து ரூ. 599.20-க்கும், சன் பார்மா 0.44 சதவீதம் சரிந்து ரூ. 621.55-க்கும், ஹெச்டிஎப்சி பங்கு 0.35 சதவீதம் சரிந்து ரூ. 877-க்கும் விற்பனையானது. ஆசிய பிராந்தியத்தில் ஜப்பானின் நிகிகி சரிவைச் சந்தித்தது. ஆனால் சீன பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது.