

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அடுத்த வாரம் ரூ. 1,500 கோடி விடுவிக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
துணை மானியக் கோரிக்கையில் ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைக்க ரூ. 2,345 கோடி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித் தது. இதையடுத்து அடுத்த வாரம் ரூ. 1,500 கோடி விடுவிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
நிறுவனத்தை சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமையிலிருந்து ரூ.29 ஆயிரம் கோடி ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் சுமை ரூ.55 ஆயிரம் கோடியாகும்.
ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைக்கும் நடவடிக்கை முந்தைய காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியிலிருந்த போதே மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனம் ரூ. 30,231 கோடியை இதுவரை அரசிடமிருந்து பெற்றுள்ளது. இந்நிறுவனத்தை சீரமைக்க 10 ஆண்டு அடிப்படையிலான முதலீட்டு திட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சீரமைப்பு திட்ட நடவடிக்கையானது 2012-ம் ஆண்டில் தொடங்கியது.