Last Updated : 11 Sep, 2014 11:52 AM

 

Published : 11 Sep 2014 11:52 AM
Last Updated : 11 Sep 2014 11:52 AM

தகவலும் சிறந்த மூலதனமே!

பிக்டேட்டா பற்றி இதுவரை நீங்கள் சொல்லியதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இது பெரிய மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கானது போலல்லவா இருக்கின்றது. எங்களைப் போன்ற சிறிய நிறுவனங்களுக்கெல்லாம் இது உதவாதோ என்று பல சிறு தொழில் அதிபர்கள் கேட்கின்றார்கள்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இதை சிறு நிறுவனங்களும் உபயோகிக்கலாம் என்று சொன்னால் எங்களிடம் டேட்டா ஒன்றும் பெரியதாக இல்லையே! என்று சிலரும், டேட்டாவே இல்லையே!!! என்று பலரும் சொல்கின்றனர்.

பிக் டேட்டா என்றாலே அளவுக்கு அதிகமாக டேட்டா இருக்கவேண்டும் என்று இல்லை. கொஞ்சமாய் குழப்பமாய் இருந்தாலும், பல மூலைகளில் மற்றும் மூளைகளில் சிதறிக் கிடந்தாலும் அது பிக்டேட்டாவே. சிறு நிறுவனங்களில் பல சமயம் இந்த பிக்டேட்டா கம்ப்யூட்டரில் பாதியும் அந்தந்த டிபார்ட்மெண்டில் நீண்டநாளாகப் பணியில் இருக்கும் அலுவலர்கள் மூளையில் மீதியுமாய் சிதறிக்கிடக்கும்.

குட்டி அனலிட்டிக்ஸ்

அந்தக் கம்பெனிக்கெல்லாம் ஆர்டர் கொடுக்காதே – சரக்கு சரியான நேரத்தில் வராது. இந்த கடைக்கெல்லாம் சரக்குப் போடாதே – பணம் வரவே வராது என்று சொல்லும் நபர்கள், கடைசியா போன தீபாவளிக்கு சரக்கு சரியா அனுப்பிச்சான், அதுக்கப்புறம் ஒவ்வொரு ஆர்டரும் ஏழெட்டு நாள் தாமதம்தான். குறைஞ்ச பட்சம் நாலுநாள் அதிக பட்சம் பத்துநாள் வரை இழுத்துடுவான் சார்.

அவனுக்கெங்கே தொழிலைப்பார்க்க நேரம், என்னைக்கு நாம எந்த ஒட்டலில் பாருக்குப் போனாலும் அவனை ஒரு கூட்டத்தோடு பார்க்கலாம் என்று கூடுதல் தகவல் தரும் அக்கவுன்டென்டும் மனித உருவில் நடமாடும் குட்டி அனலிடிக்ஸ் நிபுணர்களே. இந்த தகவலை தொகுத்து சொல்ல டேட்டாவை மூளையில் வைத்திருக்கும் ஆள் ஸ்பாட்டில் தேவைப்படுகிறார். மூளையையும் கம்ப்யூட்டரையும் இணைக்க யுஎஸ்பி கேபிள் இன்றுவரை எதுவுமில்லை. எனவே, அந்த நபர் வேலையை விட்டுப்போய்விட்டாலும், நீண்ட விடுப்பில் சென்று விட்டாலும் தகவல் சொல்ல ஆளிருக்காது.

கம்ப்யூட்டரே எச்சரிக்கும்!

அதே சமயம் கடைக்கு விற்பனை செய்த தேதி, பணம் நமக்கு கலெக்‌ஷன் ஆன தேதி, சப்ளையருக்கு ஆர்டர் போட்ட தேதி, சரக்கு நமக்கு டெலிவரி ஆன தேதி ஆகியன நம்முடைய கம்ப்யூட்டரில் இருந்து ஒரு மினி அனலிடிக்ஸ் சாப்ட்வேரும் இருந்தால் என்னவாகும். சரக்கு வேண்டும் என்று கடைக்காரர் கேட்டு பில்போடும் போதே இந்த ஆள் - இத்தனை நாள்! என்று சைலண்டாய் போட்டுக்கொடுத்துவிடும்.

பில் போட விடாது. இல்லையா?. நம் நிறுவனத்தில் எத்தனை பில்லிங்/ஆர்டரிங் கிளார்க்குகள் மாறினாலும் தப்பான ஆளுக்கு சரக்கோ, ஆர்டரோ போகவே போகாது இல்லையா?. இந்த அனலிடிக்ஸ் சாப்ட்வேரை மேலும் மெறுகேற்றினால் ரெகுலராய் சரக்கு வாங்கி அட்வான்சாய் தொடர்ந்து பணம் அனுப்பும் நல்ல வியாபாரியின் கடைக்கு விலையில் அதிக டிஸ்கவுண்டிற்கு அந்த சாப்ட்வேரே ரெகமெண்டெஷன் கூட செய்யும் வாய்ப்புள்ளது.

எங்கே டேட்டா கிடைக்கும்?

இதற்கெல்லாம் முதலில் டேட்டாவை கலெக்ட் செய்ய வேண்டும். டேட்டா இருந்தால் தானே அனலிடிக்ஸிற்கு அது வழிவகுக்கும். டேட்டா கலெக்‌ஷனில் ஒரு முக்கியமான சிக்கல் உள்ளது. எல்லா விதமான டேட்டாவையும் ஒரே இடத்தில் இருந்து ஒரு பிசினஸால் பெற முடியாது. எந்தக் கடைக்காரர் அட்வான்ஸாய் பணம் தருகின்றார் என்ற டேட்டா உங்களுடைய அக்கவுன்டிங் சாப்ட்வேரில் இருக்கும்.

அவர் கடையில் எந்த அளவுக்கு வேகமாய் உங்கள் சரக்கு விற்றுத் தீர்கின்றது என்ற டேட்டா அவருடைய பில்லிங் கம்ப்யூட்டரில் இருக்கும். சரக்கை வாங்கிச் சென்ற கஸ்டமர்களில் எத்தனை பேர் திரும்ப வந்து இரண்டு எக்குஎக்கிவிட்டு போனார்கள் என்பது அந்தக் கடையில் வேலை பார்க்கும் பணியாளர்களின் மூளையில் இருக்கும். நாம என்ன மல்டி நேஷனல் கம்பெனியா? கால்சென்டர் வைத்து 24/7 திட்டு வாங்கிக்கட்டிக்கொண்டு அதையும் பதிந்து வைத்துக்கொள்ள! பிழைப்பை ஒழுங்காய் ஓட்ட படாதபாடுபடும் பல்டி நேஷனல்தானே.

நம்ம கம்ப்யூட்டர், நம்முடைய பொருளை விற்பனை செய்யும் கடையின் கம்ப்யூட்டர், விற்பனை மற்றும் சர்விஸ் பிரதிநிதியிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் என பல்வேறு ரூபத்தில் டேட்டா நம்மைத்தேடி வரும். இந்த டேட்டாக்களை ஒருங்கிணைத்தல் என்பது டேட்டா அனலிடிக்ஸின் இரண்டாம் நிலை.

டூப்ளிகேஷன்

சரி. பல்வேறு ரூபத்தில் வந்த டேட்டாவை சரி செய்தாயிற்று. ஓட்டுடா அனலிடிக்ஸை. பார்த்துவிடுவோம் ஒரு கை என்று வரிந்து கட்ட முடியுமா என்ன. முடியாது சாமி. முடியாது. பல இடத்திலிருந்து வரும் டேட்டாக்களை சேர்க்கும் போது ஒரு புதுப்பிரச்சினை வரும். அதுதான் டூப்ளிக்கேஷன். டேட்டாவை சீர் செய்வதில் மிக முக்கிய வேலையே இங்கேதான் இருக்கின்றது எனலாம்.

இதை முதலில் சலித்து வெளியே எடுக்க வேண்டியிருக்கும். அதற்கப்புறமாய் காத்துக்கொண்டிருப்பது டுபாக்கூர் டேட்டாக்களை கழட்டிவிடுதல் நிலை. சரக்குக்குப் பணத்தை லேட்டாகத் தரும் கடைக்காரர் எக்கச்சக்கமாக கம்ப்ளெயிண்ட்டை பதிந்து வைத்துக்கொண்டு உங்க சரக்கு இருக்கிற லட்சணத்துக்கு அட்வான்ஸ் பேமென்டா தருவாங்க என டுபாக்கூர் வேலைகளை செய்துவைப்பார் இல்லையா?.

அதனால், இந்த டேட்டாவில் எதை நாம் தேடப்போகின்றோம் என்று முடிவு செய்த பின்னர் தேடும் விஷயம் கிடைக்கும் போது அது உண்மையானதுதான் என்பதை உறுதி செய்ய எந்தெந்த முன்னெச்சரிக்கை செக்கிங் நடவடிக்கைகளை நாம் செய்துகொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். இந்த உதாரணத்தில் பணம் ஒழுங்காய் கொடுக்கும் கடையிலிருந்து வரும் கஸ்டமர் கம்ப்ளெயிண்ட்களின் எண்ணிக்கைக்கும் மற்றும் ஒழுங்காய் வராத கடையில் இருந்து வரும் கஸ்டமர் கம்ப்ளெயிண்ட்களின் எண்ணிக்கைக்கும் தொடர்பு எப்படி உள்ளது என்பதை முதலில் செக் செய்து பார்ப்பது. இந்த செக்கிங்குகளை முடிவு செய்வதுதான் டேட்டா அனலிடிக்ஸில் மிகமிக கவனமாகச் செய்யவேண்டிய விஷயம்.

ஏனென்றால், அறிந்தோ அறியாமலோ நம் கையில் இருக்கும் டேட்டாவின் நம்பகத்தன்மையை பணாலாக்கும் விஷமிகள் நிறையப்பேர் நம்மைச் சுற்றி இருக்கவே செய்கின்றார்கள்.

லேட்டஸ்ட் யோசனை

இதையெல்லாம் செய்வதற்கு முன்னால் செய்யவேண்டிய ஒன்று இருக்கின்றது. நிஜத்தில் நாம் கலெக்ட் செய்யப்போகும் டேட்டாவும், இதைத்தான் நாம் கலெக்ட் செய்யப்போகின்றோம் என மனதில் யூகித்து வைத்திருக்கும் டேட்டாவின் அளவும் கிட்டத்தட்ட நூறு மடங்கு வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. 1990களின் இறுதியில் வழக்கொழிந்துபோன கம்ப்யூட்டரை ஆபிசில் வைத்துக்கொண்டு அனலிடிக்ஸிற்கு முயன்றால் உங்களுடைய பேஸ்மெண்ட் வீக்தான்.

குவியும் டேட்டா

நம்முடைய கையில் இருப்பது எவ்வளவு? புதியதாய் எவ்வளவைத் திரட்டவேண்டியிருக்கும்? எத்தனை ஜீபி டேட்டாவை நாம் கலெக்ட் செய்துவிடும் வாய்ப்பு இருக்கின்றது என்றெல்லாம் ரூம் போட்டு யோசித்து ஒரு சிஸ்டம் இன்ப்ராஸ்ட்ரக்சர் தயார் செய்தபின் அனலிடிக்ஸ் களத்தில் இறங்குவோம். நாம சொன்னா யார் கேக்குறா? இவ்வளவு பவர்புல் சிஸ்டமெல்லாம் நம்ம கம்பெனிக்கு தேவையில்லை என்பார் சிஸ்டம்ஸ் மேனேஜர். எண்ணி மூன்றாவது மாதத்தில், முதலாளியாகிய நீங்கள் ஒரு புது டைப் ரிப்போர்ட்டைக் கேட்டு இப்பவே வேணும் என்று பறந்தால் சிஸ்டம் ரொம்ப ஸ்லோவா இருக்கு சார்.

புது ரிப்போர்ட்டுக்காக கொஞ்சம் கூடுதல் டேட்டாக்களை சேர்த்தோமா அதனாலேயோ என்னமோ! என்பார். என்னப்பா “அன்னைக்கு அப்படி சொன்னியே?” என்றால், “அது போன மாசம். இது இந்த மாசம். ஒரு மாசத்துல ஒவாரா டேட்டா சேர்ந்துடுச்சு” என்பார். பணம் சேர்க்கப்போனேன்! டேட்டா சேர்த்துவந்தேன்! என்று உங்களுக்கு பாடத்தோன்றினாலும் அந்த டேட்டாவிலிருந்து பணத்தை சேர்க்க உதவத்தானே அனலிடிக்ஸ் இருக்கின்றது என்பது முதலாளியாகிய உங்களுக்கு தெரியாததா என்ன?.

cravi@seyyone.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x