

தி இந்து குழுமத்திலிருந்து வெளிவரும் ‘பிசினஸ் லைன்’ நாளிதழுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘பிசினஸ் லைன்’ நாளிதழ் தனது 25 ஆண்டுகளை நேற்று நிறைவு செய்து, 26-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் கதையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நாளிதழ் என்ற பெருமையைப் பெற்ற ‘பிசினஸ் லைன்’ நாளிதழுக்கு பிரதமர் மோடி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தி இந்து ‘பிசினஸ் லைன்’ நாளிதழ் இந்திய மற்றும் சரவதேசப் பொருளாதாரம், சந்தைப் போக்கு போன்றவற்றின் பல்வேறு விஷயங்களை செய்தியாகவும், அலசல் கட்டுரைகளாகவும் பதிவு செய்துவரும் பிரபல மற்றும் முக்கிய நாளிதழாகப் பரவலாக அறியப்பட்டுள்ளது. ‘பிசினஸ் லைன்’ அதற்கே உரிய வாசகர்களை சம்பாதித்தது மட்டுமல்லாமல், முக்கிய பிசினஸ் பிரமுகர்களின் நம்பகத்தன்மையையும் பெற்றிருக்கிறது.
அரசின் பல சிக்கலான கொள்கைகளை பகுப்பாய்வு செய்து அதை எளிமையாக மக்களுக்குப் புரியவைக்கும் முயற்சி என்பது மகத்தானது. இதில் ‘பிசினஸ் லைன்’ முக்கியப் பங்கு வகிக்கிறது. தனது வாசகர்களுக்கு பொருளாதாரம் குறித்தும், தொழில் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. அரசின் கொள்கைகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் தாக்கம் ஆகியவற்றையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் அரிய பணியைச் செய்கிறது. அதேசமயம் எதிர்கால பொருளாதார வாய்ப்புகள், தொழில்கள் முன்னேற்றம் அடைவதற்கான ஆலோசனைகள் ஆகியவை குறித்த கட்டுரைகள் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.
இந்த வகையில் தி இந்து ‘பிசினஸ் லைன்’ இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரிய பங்காற்றுகிறது. தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தன் பங்கை ஆற்றும் என்று உறுதியாகச் சொல்லலாம். ஒட்டுமொத்த ‘பிசினஸ் லைன்’ நாளிதழ் குழுவுக்கும், அதன் எதிர்கால முயற்சிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.