Published : 24 Jan 2019 11:11 AM
Last Updated : 24 Jan 2019 11:11 AM

ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது ஊழல் வழக்கு: மத்திய புலனாய்வு ஆணையம் நடவடிக்கை

மத்திய புலனாய்வு ஆணையம் (சிபிஐ) ஏர் இந்தியா முன்னாள் தலைவர்  உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது.  விதிமுறைகளை மீறி பதவி உயர்வு கொடுத்ததற்காகவும், பண ஆதாயம் பெற சிலருக்கு உதவியதற்காகவும் இவர்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவில் ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில், அதிகாரிகள் பதவி உயர்வு போன்றவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இது குறித்த விசாரணையை சிபிஐ தொடங்கியது.

இந்த விசாரணையை அடுத்து தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அரவிந்த் ஜாதவ், பொது மேலாளர் (மருத்து சேவைகள்) எல்.பி,நக்வா, கூடுதல் பொது மேலாளர் (ஆப்பரேஷன்ஸ்) கேப்டன் ஏ.கத்பாலியா, கூடுதல் பொது மேலாளர் (ஆப்பரேஷன்ஸ்) கேப்டன் அமிதாப் சிங், கேப்டன் ரோஹித்பாசின் கூடுதல் பொது மேலாளர் (ஆப்பரேஷன்ஸ்) மற்றும் சில ஏர் இந்தியா அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் தலைவர் அரவிந்த் ஜாதவ், பதவி உயர்வுகளைப் பரிந்துரைப்பதற்கான தேர்வுக் குழுவை முறைகேடாக அமைத்திருக்கிறார். மேலும் தகுதியற்ற எல்.பி.நக்வாவை விதிமுறைகளை மீறி தேர்வுக்குழுவிடம் பரிந்துரைத்து பதவி உயர்வு பெறச்செய்திருக்கிறார். மேலும் ஏ.கத்பாலியா, அமிதாப் சிங், ரோஹித் பாசின் உள்ளிட்டோருக்கும் விதிமுறைகளை மீறி ஆதாயம் பெற உதவியிருக்கிறார். இவ்வாறு சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x