

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கனவுத் திட்டமான ஜன் தன் திட்டத்தை பிரபலப்படுத்த வங்கிகளுக்கு ஊக்கப் பரிசு அளிப்பது குறித்து நிதி அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லியில் சுதந்திர தின உரையாற்றும்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜன் தன் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை ஓவர் டிராப்ட் வசதி அளிக்கப்படும்.
ஆதார் அட்டை அடிப்படையில் இந்த கணக்கு தொடங்கப்படும். முதல் கட்டமாக 7.5 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் எட்டவேண்டும் என காலக் கெடு கொடுக்கப்பட்டது. அது இப்போது மாற்றியமைக்கப்பட்டு 2015 ஜனவரி 26, அதாவது குடியரசு தினத்துக்குள் எட்டவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் சேர்க்கப் படும் பயனாளிகளுக்கு `ரூபே டெபிட் கார்டு’ மற்றும் ரூ. 1 லட்சத்துக்கான விபத்து காப்பீடு உள்ளிட்ட வசதிகளும் அளிக் கப்படும். அத்துடன் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான ஆயுள் காப்பீடும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஜன் தன் திட்டம் குறித்து ஆராயப்பட்டது. மொத்தம் 3.02 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ.1,500 கோடி பணம் திரட்டப்பட்டுள்ளதாகவும் கூறப் பட்டது. இவற்றில் 1.89 கோடி பயனாளிகள் கிராமப்பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகள் ரூ. 1,459.51 கோடி சேமிப்பைத் திரட்டியுள்ளன. இதன்படி சராசரி யாக ஒரு கணக்குக்கு ரூ. 495 திரட்டப்பட்டுள்ளது.
முந்தைய திட்டத்தில் வீடுகள் குறித்தோ அல்லது நகர்ப்பகுதி மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்கச் செய்வது குறித்தோ திடமான இலக்கு கிடையாது. மேலும் அதில் உங்கள் வாடிக்கை யாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) எனப்படும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வது உள்ளிட்ட சிரமமான விஷயங்கள் இருந்தன