

நாடு முழுவதும் கடந்த மாதம் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இ-வே பில் முறையில் அதிகமான முறைகேடுகள் செய்து குஜராத்தில் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இ-வே பில், வரிஏய்ப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இ-வே பில் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்குகளை கொண்டு செல்ல ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவதே இ-வே பில் ஆகும். இந்த நடைமுறை கடந்த ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை ஏராளமான இ-வே பில் மோசடிகள் நடந்து அவை அதிகாரிகளால் பிடிபட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 1,100 வழக்குகளும், ரூ.27.8கோடிக்கு வரி ஏய்ப்புகள் நடந்துள்ளன.
அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கு ரூ.1.76 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 134 வழக்குகளும், ராஜஸ்தானில் 124 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இ-வே பில் முறைகேட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறைவாக இருந்தபோதிலும், வரி ஏய்ப்பில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.13.3 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது. கேரள மாநிலத்தில் 2 வழக்குகளும், ஆந்திர மாநிலத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.