மீண்டும் வங்கி ஸ்டிரைக்?: 2019 ஜனவரியில் இரு நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டம்

மீண்டும் வங்கி ஸ்டிரைக்?: 2019 ஜனவரியில் இரு நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டம்
Updated on
1 min read

வங்கி வேலை நிறுத்தம் முடிந்து சில நாட்கள் ஆகியுள்ள நிலையில் 2019 ஜனவரி மாத முதல் வாரத்தில் மீண்டும் வேலை நிறுத்தம் செய்ய அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பு (ஏஐபிஇஏ) திட்டமிட்டுள்ளது.

வங்கிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2019, ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, மும்பை பங்குச் சந்தையில் அளித்துள்ள நோட்டீஸ் கூறுகையில், “ இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை வங்கி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2019, ஜனவரி 8,9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், வங்கிச்சேவைகள் அதனுடைய கிளைகளில் எளிதாகக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தம் நடந்தால், கடந்த 20 நாட்களுக்குள் நடக்கும் 3-வது வங்கி வேலை நிறுத்தம் இதுவாகும். ஊதிய உயர்வு, வங்கிகள் இணைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வாடிக்கையாளர்களுக்கான வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளையும் ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த வங்கி இணைப்பைக் கண்டித்து வங்கிகள் அனைத்தும் 26-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணிகள், காசோலை, வங்கிச் சேவைகள் உள்ளிட்ட பல பணிகள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in