Last Updated : 18 Dec, 2018 08:29 AM

 

Published : 18 Dec 2018 08:29 AM
Last Updated : 18 Dec 2018 08:29 AM

உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிப்பதால் ரிசர்வ் வங்கியின் தர மதிப்பீடு சரியும்: ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசுக்கு மாற்றும் நடவடிக்கை எடுத்தால் ரிசர்வ் வங்கியின் தர மதிப்பீடு சரியும் என்று ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

இப்போது தர மதிப்பீடு அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் கடன் வழங்கும் மதிப்பானது ஏஏஏ என்ற அளவில் உள்ளது. இது சரியும்போது ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிப்புக்குள்ளாகும் என்று அவர் கூறினார்.

உபரி நிதியை மாற்றுவதால் மதிப்பீடு சரியும். அது எந்த அளவுக்கு இருக்கும் என்பது ஒதுக்கீடு செய்யும் தொகையைப் பொறுத்தது. சரிவானது உடனே தெரியாது. ஆனால், நிச்சயம் அதன் தாக்கம் ஒரு கட்டத்தில் வெளிப்படும் என்றார்.

இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு ரிசர்வ் வங்கியும், அரசும் பரஸ்பரம் விரிவாக விவாதிக்க வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

இப்போது பிஏஏ என்ற நிலையில் உள்ளோம். இது முதலீட்டுக்கான மதிப்பீடு ஆகும். சில சமயம் வெளிநாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்போது நமது தர மதிப்பீடு அதிகமாக இருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியிடம் அதிக லாபம் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்திய ரூபாய் மாற்று மதிப்பு மாறுபடும்போது கிடைத்த பலன். இதில் ஒரு பகுதி அவசரகால நிதிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக மொத்த லாபத்தையும் அரசிடம் ரிசர்வ் வங்கி அளித்துவிடும் என்று குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கி தன் வசம் உள்ள லாபத்தையோ அல்லது உபரி தொகையையோ அளித்தால் ரூபாய் மதிப்பு வலுவடையும். அதனால் அத்தகைய வாய்ப்பையும் பயன்படுத்தலாம் என்றார்.

உபரி நிதியை வழங்குவதில் அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த மாதம் ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு கூட்டத்தில் உயர்நிலை குழு அமைத்து இதற்கு தீர்வு காண்பதென முடிவு செய்யப்பட்டது.

தான் கவர்னராக இருந்தபோதும் இதுபோன்ற நெருக்குதல் ஏற்பட்டது என்று குறிப்பிட்ட ராஜன், ரிசர்வ் வங்கி அதிகம் தரவேண்டும் என்று எப்போதும் அரசு எதிர்பார்க்கும் என்றார்.

தான் கவர்னராக இருந்த காலத்தில் மிக அதிக அளவில் அரசுக்கு ஈவுத் தொகை அளித்ததாகக் குறிப்பிட்டார். லாபத் தொகையைவிட உபரியாக உள்ளதைத்தான் அரசு எதிர்பார்க்கிறது. மாலேகாம் குழு கூட லாபத்தைத் தவிர வேறு எதையும் தரத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x