

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) அல்லது பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டின்(2018-19) 2-வது காலாண்டில் 7.1 சதவீதமாகக் குறைந்தது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் 8.1 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது திடீரென குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, உள்ளீட்டுச் செலவு அதிகரிப்பு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவு போன்ற காரணங்களில் இந்தப் பொருளாதார வளர்ச்சிக்குறைவு ஏற்பட்டுள்ளது, இந்தச் சரிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், வளர்ச்சி வேகத்தில் சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
ஆனால், கடந்த 2017-18-ம் ஆண்டு நிதியாண்டில் இதே 2-வது காலாண்டோடு ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி அதிகம்தான். அப்போது, 6.3 சதவீதமாகவே மட்டும் இருந்தது.
இஓய் இந்தியாவின் தலைமை கொள்கை ஆலோசகர் டி.கே. சிறீவஸ்தவா கூறுகையில், “ நடப்புநிதியாண்டின் 2-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் முதல் 7.9 சதவீதமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2-வது காலாண்டில் ஏற்றுமதி சரிந்ததால், இந்த வளர்ச்சி குறைந்துள்ளது. முதலீட்டு அளவும் 12 சதவீதம் மட்டுமே வந்துள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும்போது, 7.6 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருக்கிறது. இது முந்தைய கணிப்பான 6 சதவீதத்தைக்காட்டிலும் அதிகமாகும்” எனத் தெரிவித்தார்.
மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், “ நடப்பு நிதியாண்டின் 2-வது காலாம்டில் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாகக் குறைந்தது வேதனை அளிக்கிறது. ஆனால், உற்பத்தித் துறை வளர்ச்சி 7.4 சதவீதமாகவும், வேளாண்மை வளர்ச்சி 3.8 சதவீதமாகவும் சீராக இருக்கிறது. கட்டுமானத்துறையில் 6.8 சதவீதம், சுரங்கத்துறையில் மைனல் 2.4 சதவீதமாக வளர்ச்சி இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த நடப்பு நிதியாண்டின் முதல்பாதியில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம் இருப்பது ஆரோக்கியமானதாகும். இது உலகில் எந்த நாட்டிலும் இல்லாத பொருளாதார வளர்ச்சி” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பொருளாதார வளர்ச்சி குறித்து கூறுகையில், “நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 2-ம் காலாண்டில் நன்றாக இருக்கிறது. ஆனால், முதலாம் காலாண்டைக்காட்டிலும் ஒரு சதவீதம் குறைவு. கடந்த ஆண்டில் மிகவும் குறைந்த அடிப்படை வைத்துக் கணக்கிட்டதால், முதலாம் காலாண்டில் வளர்ச்சி அதிகமாக இருந்தது. அதனால் முதலாம் காலாண்டில் வளர்ச்சி அதிகமாக இருந்தது என்று பாஜகவினர் மார்தட்டுவது சரியல்ல. இதேபோல, 3-ம், 4-ம் காலாண்டிலும் வளர்ச்சி வேகம் இருக்க வேண்டும் “ எனத் தெரிவித்தார்.