Published : 23 Sep 2014 11:33 AM
Last Updated : 23 Sep 2014 11:33 AM

பேரங்களை முடிப்பதில் மன்னன்!

இருபதாம் நூற்றாண்டின் பத்து இணையற்ற பிசினஸ்மேன்களைப் பற்றிய பட்டியல் போட்டால், அவற்றில் நிச்சயமாக இடம் பிடிப்பவர் ஸ்டீவ் ஜாப்ஸ். கம்ப்யூட்டர் பயன்படுத்தல் ராக்கெட் சயின்ஸ் அல்ல, சாதாரண மனிதனுக்கும் கைவரும் கலை என்று பயன்படுத்தலை எளிமைப்படுத்தியவர். ஐ பாட் (iPod), ஐ போன், ஐ பேட் (iPad) என வகை வகையான அழகு கொஞ்சும் தயாரிப்புகளை உருவாக்கி, மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்து, எல்லாத் தயாரிப்புகளையும் மாபெரும் விற்பனை அடைய வைத்தவர்.

கண்டுபிடிப்புத் திறமை, தொலை நோக்கு, அழகுணர்வு, வடிவமைப்பு நுணுக்கம், தான் விரும்பியது கிடைக்கும்வரை சமரசமே செய்யாத கச்சிதப் போக்கு என ஸ்டீவ் ஜாப்ஸின் புகழ் பல பரிமாணங்களில் ஜொலிக்கிறது. இது மட்டுமா? டீல்கள் முடிப்பதில் அவர் மன்னன். 2000 கால கட்டம். வீடுகளில் கம்ப்யூட்டர் பரவலாகப் பயன்படத் தொடங்கியது. சாமானியரும் செம ஈஸியாகப் பயன்படுத்தும்படியாகக் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டன.

இசை ரசிகர்கள்

பொதுமக்கள் இசை கேட்கவும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங் கினார்கள். இவர்கள் கம்ப்யூட்டர்களில் பாடல்களைச் சேமிக்கத் தொடங்கினார்கள். இதற்காக சிடிக்கள் வாங்கினார்கள், அல்லது இணையதளங்களிருந்து பாடல்களை டவுன் லோட் செய்தார்கள். ரசிகர்கள் இப்படி டவுன்லோட் செய்தது, சில சமயங்களில் நேர்மையாகப் பணம் கொடுத்து, பெரும்பாலான சமயங்களில் திருட்டுத்தனமாக.

ஸ்டீவுக்கு இளம் வயது முதலே இசையில் ஈடுபாடு அதிகம். பாப் டிலன், பீட்டில்ஸ் ஆகியோரின் பரம ரசிகர். வெறித்தனமான ரசிகர். அவரிடம் மெர்சிடஸ் பென்ஸ் கார் இருந்தது. காரை நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுவார். போலீசிடம் அடிக்கடி மாட்டிக்கொள்வார். அப்படி ஓட்டும்போது, காரில் பாட்டு அலறும். கம்பெனியிலும் அப்படித்தான். இசை இன்ப வெள்ளத்தில் மூழ்கியபடியே வேலை பார்ப்பார்.

தரமற்ற டவுன்லோட்

ஸ்டீவ் தனக்குப் பிடித்த சில பாடல்களை இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்தார். தரம் மகாமட்டம். இசை துல்லியமாகவே இல்லை. ஏராளமான இசை ரசிகர்களும் தன் மனநிலையில் இருப்பதை ஸ்டீவ் கண்டுபிடித்தார். இது ரசிகராக, கஸ்டமராக ஸ்டீவ் பார்வை.

இதே சமயம், ஸ்டீவின் பிசினஸ்மேன் பார்வை இன்னொரு சேதி சொன்னது. மியூசிக் கம்பெனிகளின் பாடல்களை மக்கள் திருட்டுத்தனமாக டவுன்லோட் செய்வதால், அவர்களுடைய சிடி விற்பனை சரிந்துகொண்டிருந்தது. திருட்டு டவுன்லோடை நிறுத்தும் வழி தெரியாமல் திணறினார்கள்.

இருவர் பிரச்சினையையும் தீர்க்க என்ன செய்யலாம்? சிந்தித்தார் ஸ்டீவ். மூளை லைட் பளிச்சிட்டது. ரெக்கார்ட் கம்பெனிகள் டவுன்லோட் செய்யும் ஏகபோக உரிமையை ஆப்பிள் கம்பெனிக்குக் கொடுக்கவேண்டும். ஆப்பிள் கம்பெனி, தன் ஐ ட்யூன்ஸ் என்னும் ஆன்லைன் ஸ்டோர் மூலம் இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும். வாடிக்கையாளர் தரும் பணத்தை ரெக்கார்டிங் கம்பெனிகளும், ஆப்பிளும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும்.

இசை நிறுவனங்களுடன் கூட்டணி

ஈ.எம்.ஐ (EMI), யூனிவர்சல் (Universal), வார்னர் (Warner), ஸோனி, பி.எம்.ஜி. (BMG) ஆகிய ஐந்து கம்பெனிகளும் அமெரிக்காவில் இசைத்தட்டுகள் வெளியீட்டில் முன்னணியில் இருந்தார்கள். இவர்களைத் தன் வழிக்குக் கொண்டுவருவது எப்படி? இசைக் கம்பெனிகளின் கோணத்தில் இந்தப் பிரச்சினையைப் பார்த்தார். அவர்கள் என்னென்ன கேள்விகள் கேட்பார்கள், அவர்களைத் திருப்திப்படுத்த என்ன பதில்கள் சொல்லவேண்டும் என்று விலாவாரியாக ஒவ்வொரு அடியையும் கவனமாகத் திட்டமிட்டார். இசைத் தொழில் பற்றிய அத்தனை விவரங்களும் அவர் விரல் நுனியில்.

ஸ்டீவ் பிரம்மாண்ட ஆப்பிள் கம்பெனித் தலைவர். பொதுமக்கள் மனதில் ஹீரோ. தலைக்கனம் கொண்டவர் என்று எல்லோராலும் கருதப்பட்டவர்.(இது பெருமளவுக்கு உண்மையும்தான்.) ஆனால், எங்கே, எப்போது ஈகோ காட்டவேண்டும், எப்போது அதைக் கழற்றிவைக்கவேண்டும் என்பது ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தெரியும். எடுத்த காரியம் முடிப்பது முக்கியம். சொன்னார் ஈகோவுக்கு குட்பை.

பேச்சுவார்த்தை

ரிக்கார்டிங் கம்பெனிகளுடன் பேச்சு வார்த்தை தொடங்கினார். முதலில் ஒவ்வொருவரோடும் தனியாக, அடுத்து ஐவரோடும் சேர்த்து.

ஆரம்பத்தில், இந்த ஆன்லைன் ஸ்டோர் என்னும் கருத்தே அவர்களுக்குப் புரியவில்லை. பூனைகள் அப்பத்தைப் பங்கு போடும்போது சமரசம் பேச வந்த குரங்குபோல் ஸ்டீவைப் பார்த்தார்கள். “ஏகபோக உரிமை, கமிஷன்.. இசைக்குழு பாடுகிறது, நாங்கள் ரெக்கார்ட் செய்து மார்க்கெட் பண்ணு கிறோம், கஸ்டமர்கள் டவுன்லோட் செய்கிறார்கள். உனக்கு ஏன் கொடுக்கவேண்டும் கமிஷன்?“ என்று டயலாக் பேசினார்கள்.

கம்ப்யூட்டர் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் மனித வாழ்க்கையையே தலைகீழாய் மாற்றிவரும் உண்மையை ஸ்டீவ் அவர்களுக்கு விளக்கினார். பிரிட்ஜ், ஏசி, செல்போன் ஆகியவைபோல், கம்ப்யூட்டரும் அத்தியாவசிய வீட்டுப்பொருளாக மாறிவிட்டது.

மனித வாழ்க்கையில் செய்தி (Information), தகவல் பரிமாற்றம் (Communication), பொழுதுபோக்கு (Entertainment) ஆகிய மூன்றும் முக்கியமானவை. கம்ப்யூட்டர் முதலில் செய்திகள் சேகரிக்கும், சேமிக்கும் கருவியாக மட்டுமே இருந்தது: ஈ மெயில், இணையதளத் தேடல் வசதிகள் கம்ப்யூட்டரில் தகவல் பரிமாற்றம் கொண்டுவந்தன. விரைவில் மக்கள் பொழுதுபோக்குக் கருவியாகவும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவார்கள். இந்த சங்கமத்தை ICE என்று சொல்வார்கள். Information, Communication, Entertainment என்பதன் சுருக்குப் பெயர் இது.

காணாமல் போகும்

இந்த சங்கமத்தால், கஸ்டமர்கள் கம்ப்யூட்டரில் பாடல்களைச் சேமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நேர்மையான வழியில் பாடல்களை டவுன்லோட் செய்ய வசதி இல்லாததால், திருட்டுத்தனமாக டவுன்லோட் செய்கிறார்கள். ரெக்கார்டிங் கம்பெனிகளுக்கு இந்த வருமானம் இழப்பாகிறது. நாளைய உலகம் கம்ப்யூட்டர் உலகம். கம்ப்யூட்டரில் இசை சங்கமிக்கும் நாட்கள் தொடங்கிவிட்டன.

எனவே, இசையின் வருங்காலம் கம்ப்யூட்டர் கம்பெனிகளிடம்தான் இருக்கிறது என்று பேசினார். இதன் அங்கமாகத் தன்னை இணைத்துக் கொள்ளாவிட்டால், இசை ரெக்கார்டிங் தொழில் காணாமலே போய்விடும் என்று ஸ்டீவ் விளக்கினார்.

ரெக்கார்டிங் கம்பெனிகள் ஸ்டீவ் ஜாப்ஸின் குணநலன்கள் பற்றி ஆழமாக அறிந்தவர்கள். அவர் நேர்மையானவர், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர், போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்று தன் கருத்துகளைத் துணிச்சலாக எடுத்துவைப்பவர் என்று அவர்களுக்கு உறுதியான நம்பிக்கை. ஸ்டீவ் ஜாப்ஸின் ஆழமான, ஆணித்தரமான பேச்சால், ஐந்து ரெக்கார்டிங் கம்பெனிகளுக்கும் நடை முறை நிஜம் புரிந்தது. டவுன்லோட் செய்யும் ஏகபோக உரிமையை ஆப்பிள் கம்பெனிக்குக் கொடுத்தார்கள்.

பாட்டுக்கு கட்டணம்

ஒரு பாட்டுக்கு டவுன்லோட் கட்டணம் வெறும் 99 சென்ட்கள் மட்டுமே. (சுமார் 60 ரூபாய்). வசூலில் 70 சென்ட் ரெக்கார்ட் கம்பெனிகளுக்கு, 29 சென்ட் ஆப்பிளுக்கு. 2000 - க்கும் அதிகமான இசைக் கம்பெனிகளின் 3 கோடி 70 லட்சம் பாடல்கள், 45,000 சினிமாக்கள், 20,000 டிவி நிகழ்ச்சிகள் இந்த ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கின்றன. கடந்த 13 வருடங்களில் 7000 கோடி டவுன்லோட்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால், ஆப்பிள் கம்பெனியின் வருமானம் 2000 கோடி டாலர்களுக்கும் (1,20,000 கோடி ரூபாய்) அதிகம்.

இத்தனை வருமானம் ஆப்பிள் கஜானாவில் கொட்டக் காரணம்?

இசை ரசிகர், ரெக்கார்டிங் கம்பெனி ஆகிய இருவர் கண்ணோட்டங்களிலும் பிரச்சினையை அணுகிய முறை பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்கிற வேகம், எது தீர்வு என்னும் தெளிவு, அதை அடையும் உறுதி, கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தின் வருங்காலம் பற்றிய தெளிவான, உறுதியான தொலைநோக்குப் பார்வை, நேர்மை ஒளிவு மறைவு இல்லாத பேச்சு - சுருக்கமாகச் சொன்னால், ஸ்டீவ் ஜாப்ஸின் டீல் போடும் திறமை!

slvmoorthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x