நடப்பு நிதியாண்டில் ரூ.12,800 கோடிக்கு ஜிஎஸ்டி வரிஏய்ப்பு: மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்

நடப்பு நிதியாண்டில் ரூ.12,800 கோடிக்கு ஜிஎஸ்டி வரிஏய்ப்பு: மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்
Updated on
1 min read

நடப்பு நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை ரூ.12 ஆயிரத்து 766.85 கோடிக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்று மத்தியஅரசு அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து ஒரு ஆண்டு முடிந்து 2-ம் ஆண்டு நடைமுறையில் இருக்கிறது. ஆனாலும், ஜிஎஸ்டி வரியை முறையாகச் செலுத்தாமல் போலி பில்களை காட்டி வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் சிலர் வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். ஜிஎஸ்டி சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் அவ்வப்போது அதிரடிச் சோதனை நடத்தி வரி ஏய்ப்புகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

அது குறித்து மாநிலம் வாரிய நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குறித்து மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக 3 ஆயிரத்து 196 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.12 ஆயிரத்து 766.85 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி வரி அதிகாரிகள் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக, வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 909.96 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

வரிஏய்ப்பை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இ-வே பில் சிஸ்டம், தரவுகளை வரிசைப்படுத்துதல், தீவிர சோதனை போன்றவற்றைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு சற்று அதிகரித்துள்ளது.

கடந்த 2017 ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 2018 ஜுலை மாதம் வரை ஓர் ஆண்டில் 1,205 வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.3 ஆயிரத்து 206 கோடியாகும்.

இவ்வாறு ஷிப் பிரதாப் சுக்லா தெரிவித்தார்.

முன்னதாக, நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் மட்டும் 148 ஜிஎஸ்டி வரிஏய்ப்புகள் நடந்துள்ளது, இவற்றின் மதிப்பு ரூ.757.34 கோடியாகும். இதில் 101 வழக்குகளில் ரூ.426.47 கோடியை அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதுமட்டுமல்லாமல் சென்னையில் போலியான இன்வாய்ஸ்களை ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் அளித்து முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவன இயக்குநர்கள் 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், தமிழக அரசு கேபிள்டிவி கழகத்துக்கு செட்டாப் பாக்ஸ்களை சப்ளை செய்து வரும் கோவையில் உள்ள மந்த்ரா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மீது கடந்த ஜூலை மாதம் வரி ஏய்ப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in