சினிமா டிக்கெட், டிவி, கேமராவுக்கு வரி குறைப்பு- ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

சினிமா டிக்கெட், டிவி, கேமராவுக்கு வரி குறைப்பு- ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு
Updated on
1 min read

23 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சினிமா டிக்கெட், 32 இஞ்ச் டிவி, டிஜிட்டல் கேமரா உள்ளிட்டவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த  தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன், பாஜகவும், பிரதமர் மோடியும் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி நடத்திய 3 மாநிலங்களில் படுதோல்வியடைந்ததால் மக்கள் ஆதரவை பெறும் நோக்குடன் மத்திய அரசு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதை உறுதி செய்யும் விதமாக, மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் ‘‘பல ஆண்டுகளாகவே நாட்டிற்கு ஜிஎஸ்டி முறை தேவையாக இருந்தது. அதை அமல்படுத்தியதன் மூலம் வர்த்தகச் சந்தையில் இருந்த இருந்த முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. பொருளாதாரமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறியிருக்கிறது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதற்கு முன்னர் 65 லட்சம் நிறுவனங்கள் மட்மே பதிவு செய்திருந்தன. ஆனால், தற்போது, இந்த எண்ணிக்கையில் கூடுதலாக 55 லட்சம் அதிகரித்துள்ளது. சில ஆடம்பர பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் உள்ளிட்ட, 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ எனத் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு

இதனால் விலை உயர்ந்த ஏசி, டிவி, கேமரா உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களின் சார்பில் நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதன்படி ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்படும் 28 சதவீத உயர் ஜிஎஸ்டி வரி பிரிவில் இருந்து 7 பொருட்கள் 18 சதவீத வரி பிரிவுக்கு கொண்டு வரப்பட்டன.

32 இஞ்ச் டிவி, கியர் பாக்ஸ், டிஜிட்டல் கேமரா, வீடியோ கேம் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இதுபோலேவே சினிமா டிக்கெட்டுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு மேற்பட்ட சினிமா டிக்கெட்டுக்கு தற்போது 28 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில் இது 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

100 ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட்டுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத வரி 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இந்த புதிய வரி விகிதங்கள் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in