ரிசர்வ் வங்கியின் சுயசார்பை பாதுகாப்பதே முதல் இலக்கு: புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் உறுதி

ரிசர்வ் வங்கியின் சுயசார்பை பாதுகாப்பதே முதல் இலக்கு: புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் உறுதி
Updated on
1 min read

ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையும், சுயசார்பையும் பாதுகாப்பதே எனது திடமான இலக்காக இருக்கும் என அதன் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கிக்கும், மத்தி அரசுக்கும் இடையே பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து உரசல் இருந்து வந்தது. ஆனால், அது வெளியே தெரியாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பேச்சில் உரசல் இருப்பது வெளியானது.

ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் கூடுதல் இருப்புத் தொகையை மத்திய அரசு கேட்பதாக தகவல் வெளியானதையும் மத்திய அரசு மறுத்தது. மேலும், எப்போதும் இல்லாத வகையில் ஆர்பிஐ சட்டத்தைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலை அழைத்து இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பி அழைத்துப் பேசியது. இந்தச் சம்பவங்களால் ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கும் இடையிலான உறவில் உரசல் இருந்து வந்தது.

இந்தச் சூழலில் கடந்த இரு நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக உர்ஜித் படேல் அறிவித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகந்த தாஸை புதிய ஆளுநராக  மத்திய அரசு நியமித்தது.

மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்த நேரத்தில் அரசின் பல்வேறு அறிவிப்புகளை ஒருங்கிணைத்து வெளியிட்டவர் சக்திகந்த தாஸ். இந்தநிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

‘‘நாட்டின் தலைச் சிறந்த முன்னோடி நிறுவனமான ரிசர்வ் வங்கியின் நன்மதிப்பையும், நம்பகத்தன்மையும், சுயசார்பையும் பாதுகாப்பதே எனது திடமான இலக்காக இருக்கும். பொருளாதாரத்தின் தேவையை அறிந்து நேரத்துக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு இடையிலான விவகாரத்தில் நான் உள்ளே நுழைய விரும்பவில்லை. எந்த ஒரு நிறுவனமும் சுய சார்புடன் செயல்பட வேண்டும். அதே சமயம் தனக்கான பணியை உரிய முறையில் அந்த நிறுவனமும் செய்ய வேண்டும். வர்த்தக வங்கிகளின் தலைவர்களை நாளை சந்தித்து பேசவுள்ளேன்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in