Published : 06 Sep 2014 10:26 AM
Last Updated : 06 Sep 2014 10:26 AM

2-வது நாளாக பங்குச்சந்தைகள் சரிவு

சர்வதேச சூழ்நிலைகள் மற்றும் லாபத்தை வெளியே எடுக்கும் மனப்பான்மை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சரிந்து முடிந்தது. சென்செக்ஸ் 59 புள்ளிகள் சரிந்து 27026 புள்ளி களில் முடிந்தது. ஆனாலும் வர்த்தகத்தின் இடையே 27000 புள்ளிகளுக்கு கீழே சென்றது, 26920 என்ற புள்ளி வரைக்கும் சரிந்தது. அதிகபட்சமாக 27178 புள்ளிகள் வரை சென்றது. வியாழன் அன்றும் சென்செக்ஸ் 54 புள்ளிகள் சரிந்தது.

இதேபோல நிப்டியும் 9 புள்ளிகள் சரிந்து 8086 புள்ளிகளில் முடிவடைந்தது. ஆனால் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் உயர்ந்து முடிவடைந்தன. மிட்கேப் குறியீடு 0.28 சதவீதம் உயர்ந்தும், ஸ்மால்கேப் குறியீடு 1.25 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன.

புளுசிப் பங்குகள் சரிந்ததால் முக்கிய பங்குச்சந்தை குறியீடுகள் சரிந்து முடிவடைந்தன. ஹெச்.டி.எப்.சி., ஐசிஐசிஐ வங்கி, ஹிரோமோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகளின் சரிவு பங்குச்சந்தை சரிவுக்கு முக்கிய காரணங்களாகும். சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 30 பங்குகளில் 17 பங்குகள் சரிந்தும் 13 பங்குகள் உயர்ந்தும் முடிவடைந்தன.

துறை வாரியாக பார்க்கும் போது கேபிடல் குட்ஸ், மெட்டல் மற்றும் ரியால்டி ஆகிய துறை குறீயிடுகள் உயர்ந்தும், ஆட்டோ, வங்கி, எப்.எம்.சி.ஜி மற்றும் மின் துறை குறியீடுகள் சரிந்து முடிவடைந்தன.

சர்வதேச சந்தை நிலவரம்

ஐரோப்பிய மத்திய வங்கி (இசிபி) புதிய ஊக்க நடவடிக்கைகளை அறிவித்ததால் வெள்ளிக்கிழமை டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பு கடுமையாக சரிந்தது. இது மட்டுமல்லாமல் வட்டி விகிதங் களையும் ஐரோப்பிய மத்திய வங்கி குறைத்தது. மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் யூரோ அதிகமாக சரிந்தது. ஐரோப்பாவின் முக்கியமான பங்குச்சந்தைகள் அனைத்தும் சரிவுடன் தன்னுடைய வர்த்தகத்தை தொடங்கின. 18 நாடுகளை சேர்ந்த ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு தொடர்ந்து இரண்டாம் காலாண்டாக வளர்ச் சியை எட்டவில்லை.

ஒரு பக்கம் ஐரோப்பிய யூனியன் ஊக்க நடவடிக்கைகளை கொடுத்து வரும் சூழ்நிலையில் அமெரிக்கா ஊக்க நடவடிக்கைகளைக் குறைத்து வருகிறது. அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்து வருவதினால் டாலர் மதிப்பு உயர்கிறது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையில் சரிவு இருக்கிறது. டாலர் மதிப்பு பலமடைந்து வந்தாலும் இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு தொடர்ந்து இருப்பதால் ரூபாயின் மதிப்பில் பெரிய சரிவு இல்லாமல் இருக்கிறது.

ஜேபி அசோசியேட்ஸ் கடும் சரிவு

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் ஜே.பி.அசோசியேட்ஸ் பங்கு 11 சதவீதம் சரிந்தது. வியாழன் வர்த்தகத்திலும் இந்த பங்கு 18 சதவீதம் சரிந்தது குறிப் பிடத்தக்கது. நிறுவனத்தின் புரமோட்டர் ஜேபி இன்பிரா வென்ச்சர்ஸ் 1.3 கோடி பங்குகளை விற்றதால் இந்த பங்கில் சரிவு இருந்தது. வெள்ளிக்கிழமை 33.85 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது. ஜேபி குழும நிறுவனங்களின் பங்குகளும் சரிவில் இருந்து தப்பவில்லை.

ஜேபி இன்பிராடெக் 7.23 சதவீதம் சரிந்தது. கடந்த நான்கு நாட்களாக ஜேபி அசோசியேட்ஸ் பங்கு சுமார் 30 சதவீதம் சரிந்தது. இதனால் 2473 கோடி ரூபாய் சந்தை மதிப்பை இந்த பங்கு இழந்தது. பணத் தேவைகளுக்காக சிறிய அளவு பங்கினை புரமோட்டர் விற்றிருக்கிறார். ஆனால் புரமோட்டர் தன்வசம் இருக்கும் அனைத்து பங்குகளையும் விற்கப் போவதாக வதந்தி இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் புரமோட்டர்கள் வசம் 72.36 கோடி பங்குகள் இருக் கின்றன. இதில் 1.45 சதவீத பங்குகள் மட்டுமே விற்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x