

கடந்த 2017-18-ம் ஆண்டில் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடியாளர்கள் செய்த மோசடி செயலால் வங்கிகளுக்கு ரூ.41 ஆயிரத்து 167.23 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.23 ஆயிரத்து 933 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 72 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:
கடந்த 2017-18-ம் ஆண்டில் வங்கி மோசடி தொடர்பாக 5 ஆயிரத்து 917 வழக்குகள் பதிவாகின. இது கடந்த 2016-17-ம் ஆண்டில் 5 ஆயிரத்து 76 வழக்குகளாக இருந்தநிலையில் அதிகரித்துள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டில் ரூ.10,170 கோடியாக இருந்த வங்கி மோசடியின் அளவு தற்போது 4 மடங்கு அதிகரித்து, 2017-18-ம் ஆண்டில் ரூ.41 ஆயிரத்து 167 கோடியாக உயர்ந்துவிட்டது.
தவறான வரவு செலவு அறிக்கையை அளித்தல், அன்னியச் செலவானி பரிமாற்றத்தில் மோசடிகள், டெபாசிட் கணக்குகள் போன்றவற்றில் அதிகமான மோசடிகள் நடந்துள்ளன.
சைபர் தொடர்பான மோசடிகளில் மட்டும் வங்கிகளுக்கு 2017-18-ம் ஆண்டில் ரூ.109.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, 2,059 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த 2016-17ம் ஆண்டில் 1,372 வழக்குகளாகவும், ரூ.42.30 கோடி அளவுக்கும் மோசடி நடந்திருந்தது. பெரும்பாலும் ரூ.50 கோடி அதற்கு மேலான தொகையில்தான் 80 சதவீத மோசடி சம்பவங்கள் 2017-18-ம் ஆண்டில் நடந்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் 93 சதவீத மோசடிச் சம்பவங்கள் நடந்துள்ளன. இது தனியார் வங்கிகளில் 6 சதவீதமாக இருக்கிறது.
கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வாராக் கடன்களின் அளவு ரூ.10 லட்சத்து 39 ஆயிரத்து 700 கோடியாக உயர்ந்துவிட்டது. குறிப்பாக பிஎன்பி வங்கியில் நிரவ்மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரின் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி முக்கியமாகும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.