

பணவீக்கம் அதிகரிக்கும் வரை ஊக்க நடவடிக்கைகள் தொடரும் என்று ஐரோப்பிய மத்திய வங்கியின் (இசிபி) தலைவர் மரியோ திராகி தெரிவித்திருக்கிறார். தற்போது மிகவும் குறைவான நிலைமையில் இருக்கும் பணவீக்கம் 2 சதவீதத்துக்கு மேலே செல்லும் வரையில் ஊக்குவிப்பு சலுகைகள் தொடரும் என்றார் அவர்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை பணவீக்கம் அடையும் வரை ஊக்க நடவடிக்கைகள் தொடரும் என்று ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆட்சிக்குழு ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாகவும் திராகி தெரிவித்தார். ஐரோப்பாவின் வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் கூறினார். மேலும் வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு கீழேயும் குறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் பணவீக்கம் குறைந்து கொண்டே இருக்கிறது. இப்போதைய நிலையில் நுகர்வோர் பணவீக்கம் 0.1 சதவீதமாக இருக்கிறது. பணவாட்ட சூழ்நிலை உருவாக்கும் வாய்ப்பு தற்போது இல்லை, ஆனாலும் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருவது மோசமான சூழ்நிலையை உருவாக்கலாம் என்று திராகி தெரிவித்தார்.
இதுவரை ஐரோப்பிய யூனியன் தரப்பில் 9.5 லட்சம் கோடி யூரோ அளவுக்கு ஊக்க நடவடிக்கைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பொருளாதார வளர்ச்சியோ மற்றும் பணவீக்கமோ உயரவில்லை.