

தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பை வகிப்பார்.
மத்தியில் பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன், நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியம் 2014-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டே இவரின் பதவி முடிந்த நிலையிலும் அவருக்கு ஒரு ஆண்டு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டது. வரும் அக்டோபர் மாதத்துடன் பதவிக்காலம் முடியும் நிலையில் முன்கூட்டியே ஜூன் மாதம் பதவி விலகினார்.
இந்த நிலையில் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டுகள் இந்த பதவில் நீடிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸில் உதவி பேராசிரியராக பணியாற்றும் சுப்பிரமணியன், சிகாகோவில் பிஎச்டி பட்டம் பெற்றவர். உலகம் முழுவதும் முன்னணி பல்கலைக்கழகங்கள், பொருளாதார ஆய்வு நிறுவனங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.
கார்பரேட் நிறுவனங்களின் நிர்வாகம், பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபி, ரிசர்வ் வங்கி நிபுணர்கள் கமிட்டியில் இடம் பெற்றுள்ளார். சட்டம், கார்பபேரட் நிர்வாகம், நிதி, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றில் நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டவர்.