

நவம்பர் மாதத்தில் நடந்த யுபிஐ பரிவர்த்தனைகள் அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் 9 % உயர்ந்துள்ளது. மேலும் முதல் முறையாக 50 கோடி பரிவர்த்தனைகளைத் தாண்டி நடந்துள்ளது.
யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் முறையில் (யுபிஐ) மொபைல் எண் மூலமாகவும், க்யூஆர் கோட் மூலமாகவும் பணம் அனுப்பவும் பெறவும் முடியும். இந்த முறையில் நடக்கும் பரிவர்த்தனைகள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அக்டோபர் மாதத்தில் 48 கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ முறையில் நடந்துள்ளன. இதன் மதிப்பு ரூ. 74,978 கோடி. ஆனால் நவம்பர் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் 9 சதவீதம் உயர்ந்து 52 கோடி பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. இதன் மதிப்பு ரூ. 82,232.21 கோடி.
இதுகுறித்து இந்திய தேசிய பரிவர்த்தனைகள் நிறுவனம் கூறுகையில், “யுபிஐ பரிவர்த்தனைகள் முதன்முறையாக 50 கோடியைக் கடந்திருப்பது பெருமையளிக்கிறது” என்று கூறியது.