

வங்கிகள் தற்போது வாடிக்கையாளருக்கு அளிக்கும் இலவச சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுவதால் அந்த வரியை வாடிக்கையாளரிடமே வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதன்படி 18 சதவீத ஜிஎஸ்டி-யை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி ஆகியன இதை செயல்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றன. வங்கிகள் அளிக்கும் காசோலை, கூடுதல் ஏடிஎம் அட்டை, ஏடிஎம் பயன்பாடு உள்ளிட்ட சேவைகளுக்கு வரி விதிக்குமாறு வரித்துறையினர் வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து வாடிக்கையாளரிடம் வரி வசூலித்து அதை அப்படியே அரசிடம் செலுத்திவிடலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி வங்கிகள் அளிக்கும் காசோலை, கூடுதல் கிரெடிட் கார்டு, ஏடிஎம் பயன்பாடு, எரிபொருள் ரீபண்ட் மீதான சர்சார்ஜ் ஆகியவை மீது ஜிஎஸ்டி 18 சதவீதம் விதிக்க பெரும்பாலான வங்கிகள் முடிவு செய்துள்ளன. சில வங்கிகள் வாடிக்கையாளரிடம் வரியை வசூலிக்கத் தொடங்கியுள்ளன. ஆனாலும் பெரிய வங்கிகள் எத்தகைய நடைமுறையை பின்பற்றுகின்றன என்பதைப் பொறுத்து தாங்களும் ஜிஎஸ்டி-யை செலுத்தப் போவதாக சிறிய வங்கிகள் அறிவித்துள்ளன.
வரித்துறை பன்னாட்டு வங்கிகளான டிபிஎஸ் வங்கி, சிட்டி வங்கி உள்ளிட்டவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வங்கிகள் தங்களது வாடிக்கையாளருக்கு அளிக்கும் சேவையில் எவை இலவசம் என்று தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் இதே நடைமுறையைப் பின்பற்றி தொலைத் தொடர்புத் துறை, ரியல் எஸ்டேட், விளம்பர நிறுவனங்களும் சேவை வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.